

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், திருச்சியைச் சேர்ந்த ஜெனித்தா ஆன்டோ 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
செர்பியா நாட்டில் உள்ள நாவிஷாட் நகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூலை 22 முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தியா, இஸ்ரேல், ரஷ்யா, செர்பியா, போலந்து உட்பட 10 நாடுகளிலிருந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் பெண்கள் பிரிவில் 9 சுற்றுகளாக நடைபெற்ற போட்டிகளில் தேர்வு பெற்ற ஜெனித்தா, இறுதிப் போட்டியில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டிரியாவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை 4 முறை உலக அளவிலான போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
போட்டிகளை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு தனது தந்தை காணிக்கை இருதய ராஜூடன் திருச்சி விமான நிலையத் துக்கு வந்த ஜெனித்தாவுக்கு மக்கள் சக்தி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்தன.
தொடர் வெற்றிகள் குறித்து ‘தி இந்து’விடம் கூறிய ஜெனித்தா ஆன்டோ, “சிறுவயதிலேயே என் தந்தை கற்றுக் கொடுத்த செஸ் விளையாட்டு, இன்று எனக்கு உலக அளவில் வெற்றி பெறுவதற்கு பேருதவியாக உள்ளது. இந்த போட்டி எனக்கு கடும் சவாலா கவே அமைந்தது. இருப்பினும் பெரு முயற்சி செய்து வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளேன்.
அடுத்ததாக வரும் செப்டம்பர் மாதம் அசர்பைஜான் நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் போட்டியில் மாற்றுத் திறனாளி கள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளேன். இப்போட்டி யிலும் தங்கப் பதக்கம் வெல்வதற் கான பயிற்சிகளை இன்றே தொடங்கி விட்டேன்” என்றார்.