

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முன்னிலையில் உள்ள ரெட்புல் டிரைவர் செபாஸ்டியான் வெட்டல் தடைசெய்யப்பட்ட டிராக்ஸன் கண்ட்ரோல் முறையை பயன்படுத்தி வெற்றி பெற்று வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பார்முலா ஒன் சாம்பியன்ஷிப்பில் வெட்டல் தனது அடுத்த போட்டியாளரான அலோன்சாவை விட 60 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். இந்த வார இறுதியில் நடைபெறும் கொரிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்றால் அவர் தொடர்ந்து 4-வது பட்டத்தை வெல்வார்.
இந்நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த பார்முலா 1 அணியின் முன்னாள் உரிமையாளர் மினார்டி, ரெட்புல் அணி தடைசெய்யப்பட்ட டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டத்தை காரில் பயன்படுத்தி வெற்றி பெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். வெட்டலின் அதிவேகத்துக்கும் இதுவே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெட்டலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பெரிதாகச் சிரித்தவாறே பதிலளித்த வெட்டல், கார் பந்தயம் நடைபெறவுள்ள நாளில் தென்கொரியாவில் புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்தப் புயல்கூட நான் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது. ஏனெனில் என்னிடம் டிராக்ஸன் கண்ட்ரோல் உள்ளது.
இதனைப் பயன்படுத்துவது பெரிய ஒரு விஷயமே இல்லை. விளையாட்டில் ஆர்வமுள்ள அனைவரும் அதுதொடர்பான தொழில்நுட்பத்தை பயன்படு த்துவார்கள். இந்தக் குற்றச்சாட்டு எங்களை அவமதிப்பதாக நினைக்கவில்லை. உண்மையில் டிராக்ஸன் கண்ட்ரோலை பயன்படுத்துவது எனக்குப் பெருமை அளிக்கிறது என்றார்.