Published : 26 Apr 2017 04:07 PM
Last Updated : 26 Apr 2017 04:07 PM

சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியை அறிவிக்க வேண்டிய கடைசி தேதி கடந்து போனது

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 25 ஆகும். ஆனால் பிசிசிஐ இந்தக் காலக்கெடுவை கடந்து விட்டது.

மொத்தம் 8 அணிகளில் 7 அணிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்திய அணி இன்னமும் சாம்பியன்ஸ் டிராபி அணியை அறிவிக்கவில்லை.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய போது, பிசிசிஐ செயலர் அமிதாப் சவுத்ரி, சிஇஓ ராகுல் ஜோஹ்ரி இந்த வாரத்தில் ஐசிசி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர், கேப்டன் விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடி வருகிறார், எனவே சம்பந்தப்பட்டவர்கள் ஒரு இடத்தில் கூடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.

அணி அறிவிப்பு தாமதத்திற்கான காரணங்களை ஐசிசியிடம் தெரிவித்துள்ளோம் விரைவில் அணியை அறிவிப்போம் என்று ஐசிசியிடம் தெரிவித்து விட்டோம் என்று அந்த அதிகாரி கிரிக்கெட் இணையதளம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால்.. தாமதத்திற்குக் காரணம் இதுவல்ல, ஐசிசி வருவாயைப் பகிர்ந்து கொள்வதில் பிசிசிஐ ஒரு கோரிக்கையை வைக்க ஐசிசி ஒரு தொகையை முன்வைக்க இழுபறி ஏற்பட்டுள்ளதால் பிசிசிஐ அணி அறிவிப்புத் தாமதத்தை ஒரு லேசான மிரட்டல் உத்தியாகக் கடைபிடித்து வருகிறது என்று ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலில் பிசிசிஐ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகிய ‘பிக் 3’ கையில் ஐசிசி நிர்வாகம், வருவாய் பகிர்வு முடிவுகள் இருந்தன. ஆனால் மூவர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஐசிசி சில சீர்த்திருத்தங்களை மேற்கொண்டது. இதன் படி ஐசிசி வருவாய் பகிர்வில் பிசிசிஐக்கு வந்து கொண்டிருந்த 570 மில்லியன் டாலர்கள் வருவாய் தற்போது 290 மில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.

இதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் வருவாய்ப் பகிர்வில் பிசிசிஐக்கு 400 மில்லியன் டாலர்கள் வரை அளிப்பதாக ஐசிசி ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்திய அணித்தேர்வு தாமதமாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x