

தரம்சலாவில் உள்ள ஆஸ்திரேலிய அணியினர் அங்குள்ள மெக்லியாட் கஞ்சில் திபெத் பவுத்தத் துறவி தலாய் லாமாவைச் சந்தித்து ஆசி பெற்றனர்.
அமைதி, சமாதானத்தின் ஊற்றுக்கண்ணான தலாய் லாமாவை சந்தித்ததை ஆஸ்திரேலிய அணியினர் பெரும்பேறாக கருதுகின்றனர்.
மேலும் தலாய் லாமாவிடம் கேப்டன் ஸ்மித், உயர் அழுத்த டெஸ்ட் போட்டிக்கு முதல் நாள் நிம்மதியாக உறங்குவது எப்படி என்று அறிவுரை கேட்டார்.
சந்திப்பு பற்றி ஸ்மித் கூறும்போது, “இது மிக அருமை. நான் அவரிடம் நிம்மதியான உறக்கம் பற்றியும் அதற்கு அவர் எப்படி எனக்கு உதவ முடியும் என்று கேட்டேன், அவர் என்னை ஆசீர்வதித்தார்.
திபெத் கலாச்சாரத்தின் படி நானும் அவரும் ஒருவரையொருவர் மூக்கால் உரசிக் கொண்டோம், அவர் எனக்கு தன் ஆசிகளை வழங்கினார், இது எனக்கு அடுத்த 5 நாட்களுக்கான நிம்மதியான உறக்கத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.
ஏற்கெனவே 2013-ல் இங்கிலாந்து தொடரின் போது தலாய்லாமாவை ஆஸ்திரேலிய அணியினர் சந்திக்க முயன்றனர் ஆனால் அப்போது முடியவில்லை.
இந்நிலையில் தலாய் லாமா சந்திப்பு அணிக்கு எப்படி உதவும் என்று கூறிய ஸ்மித், “இன்னும் கொஞ்சம் நிம்மதியாக ரிலாக்ஸ் செய்வோம், அவர் கருணை மிக்கவர், ஒவ்வொரு மனிதரையும் நேசிப்பவர். அவரைப்போன்ற ஒருவரிடம் ஆசி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.
எங்கள் அனைவருக்குமே இது ஒரு அபூர்வ அனுபவமாக அமைந்தது, அவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியும் என்றால், கடினமான கிரிக்கெட் ஆட்டத்தில் நாங்கள் சில வேளைகளில் அதிகம் உணர்ச்சிவயப்படுபவர்களாக மாறிவிடுவது தடுக்கப்படலாம். ஏனெனில் கடைசியில் இது ஒரு விளையாட்டு மட்டுமே என்பதை நாங்கள் உணர வேண்டிய தேவை உள்ளது” இவ்வாறு கூறினார் ஸ்மித்.