

டெஸ்ட் கேப்டனான கோலியை ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கும் கேப்டனாக்கும் நேரம் வந்துவிட்டது என்று முன்னாள் இந்திய சுழற்பந்து மேதை எராப்பள்ளி பிரசன்னா வலியுறுத்தியுள்ளார்.
"கோலியை அனைத்து வடிவங்களுக்கும் இந்திய அணியின் கேப்டனாக்கும் நேரம் வந்து விட்டது. தோனிக்கு வயது 33-34. எனவே ஏதோ ஒரு தருணத்தில் கேப்டன் பொறுப்பை மாற்றியாக வேண்டும். அதை ஏன் இப்போதே செய்யக்கூடாது? தோனி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேனாக தொடரட்டும். இது குறித்த முடிவை தோனியே எடுக்க வேண்டும்.
என்னைக் கேட்டால் தோனி வீரராக, விக்கெட் கீப்பராகத் தொடரட்டும், அணியின் நலன் கருதி பொறுப்பை கோலியிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் தோனி, விருத்திமான் சஹாவை விட நல்ல மட்டையாளர், விக்கெட் கீப்பராக சஹாவும் அவருக்கு சமமானவரே. எனவே தோனி தொடர்ந்து ஆடலாம், இறுதி ஓவர்களில் இன்னும் அவரால் 30-40 ரன்களை விளாச முடியும் என்றே நான் கருதுகிறேன்.
அணித் தேர்வு முறைகள் புதிராக உள்ளன. நம்பர் 1 பவுலரான அஸ்வினை 2 போட்டிகளில் நீக்கியதற்கான நியாயம் இல்லை. மெல்போர்னில் ஜடேஜா நன்றாக வீசினார், அப்போது அஸ்வின் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்தியவுடன் ஜடேஜாவை ஓவரிலிருந்து விடுவித்தார் தோனி. இது நிச்சயம் கேள்விக்குரியது.
அதேபோல் மணிஷ் பாண்டே தன்னை இந்த மட்டத்தில் நிரூபிக்க போதுமான அவகாசம் வழங்காமல் குர்கீரத், ரிஷி தவண் அணியில் சேர்க்கப்பட்டனர். இருவரும் மிகச்சாதாரணமான வீரர்களே. இந்திய அணியின் பெஞ்ச் ஸ்ட்ரெந்த்தைப் பார்த்தால் சர்வதேச தரத்துக்கு இணையானதாக இல்லை. அஸ்வினை நீக்கி விட்டு ரிஷி தவணை சேர்த்தால் எப்படி வெற்றி பெற முடியும்?
பந்துகள் மெதுவாக திரும்பும் பிட்ச்கள் இருந்தால்தான் தற்போது இந்தியா வெற்றி பெறும் என்ற நிலை உருவாகியுள்ளது”
இவ்வாறு கூறினார் பிரசன்னா.