டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10  விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி
Updated on
2 min read

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொகாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி ஆடியது. டெல்லி அணியின் கேப்டனான ஜாகிர் கான் தசைப்பிடிப்பு காரணமாக இப்போட்டியில் ஆடவில்லை. அதனால் டெல்லி அணிக்கு கருண் நாயர் தலைமை தாங்கினார். ஜாகிர் கான், பாட் கம்மின்ஸ், அங்கித் பாவ்னே ஆகியோருக்கு பதில் முகமது ஷமி, சாம் பில்லிங்ஸ், ஷாபாஸ் நதீம் ஆகியோர் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். பஞ்சாப் அணியில் ஆம்லா, நடராஜன், வருண் ஆரோன் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.

டாஸில் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் செய்யுமாறு டெல்லியை அழைத்தது. மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதி பந்துவீச்சை தேர்வு செய்ததாக பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் கூறினார். அவரது எண்ணப்படியே முதல் ஓவரில் இருந்தே ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது.

முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் சாம் பில்லிங்ஸ் நடையைக் கட்ட, அவரைப் பின்தொடர்ந்து டெல்லி அணியின் வீரர்கள் ஒவ்வொருவராக ஆடுகளத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான சஞ்சு சாம்சன் (5 ரன்கள்), கருண் நாயர் (11 ரன்கள்), ஸ்ரேயஸ் ஐயர் (6 ரன்கள்), ரிஷப் பந்த் (3 ரன்கள்), ஆண்டர்சன் (18 ரன்கள்), மோரிஸ் (2) ரன்கள் என்று குறைந்த ஸ்கோரில் வெளியேற டெல்லி அணி நிலைகுலைந்தது. இறுதியில் அந்த அணி 17.1 ஓவர்களில் 67 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பஞ்சாப் அணியில் சந்தீப் சர்மா, அதிகபட்சமாக 20 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். வருண் ஆரோன், அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து ஆடவந்த பஞ்சாப் அணி 68 ரன்கள் என்ற இலக்கை அனாயாசமாக துரத்தி யது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குப்திலும், ஆம்லாவும், டெல்லி வீரர்களின் பந்துவீச்சை மைதானத்தின் நாலா புறமும் சிதறடித்தனர். குறைந்த ரன்களை எடுத்ததால் ஏற்கெனவே நம்பிக்கை குறைந்திருந்த டெல்லி வீரர்களை இது மிகவும் துவண்டு போகச் செய்தது. 36 பந்துகளில் 50 ரன்களை எட்டிய பஞ்சாப்பின் தொடக்க ஜோடி, 7.5 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது. குப்தில் 50 ரன்களையும், ஆம்லா 16 ரன்களையும் சேர்த்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பஞ்சாப் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றதால் அந்த அணி பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் நேற்றைய போட்டியிலும் தோற்றதால், டெல்லி அணியின் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு மங்கியுள்ளது.

# குஜராத் லயன்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்
இடம்: புனே, நேரம்: இரவு 8 மணி

இன்றைய போட்டிகள்

# மும்பை இந்தியன்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in