

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. துபையில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதையடுத்து பாகிஸ்தான் தொடக்கவீரர்கள் குர்ரம் மன்சூர், அகமது ஷெஸாத் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். தொடக்கம் முதலே இலங்கை வீரர்கள் அபாரமாக பந்து வீசினர். எனவே பாகிஸ்தான் வீரர்களால் வேகமாக ரன் எடுக்க முடியில்லை. விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளவே அதிக கஷ்டப்பட்டனர்.
பாகிஸ்தான் 28 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட் விழுந்தது. ஷெஸாத் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முகமது ஹபீஸ் 21 ரன்களுடன் வெளியேறினார். ஒருமுனையில் மன்சூர் நிலைத்து நின்று விளையாடினார். ஆனால் மறுமுனையில் யூனிஸ்தான் 13 ரன்கள், கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் 1 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 40.1 ஓவர்களில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.
ஸ்கோர் 118 ஆக இருந்தபோது மன்சூர் ஆட்டமிழந்தார். அவர் 136 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு பேட்டிங் செய்ய வந்தவர்களில் பிலாவல் தவிர மற்ற வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பிலாவல் மட்டும் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இறுதியா 63.5 ஓவர்களில் 165 ரன்களுக்கு பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் ஹேராத், பிரதீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், லக்மல், எரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து இலங்கை தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. கருணாரத்னே, குசல் சில்வா ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். 11 ஓவர்களில் 40 ரன்களை எட்டியபோது இலங்கை அணி கருணாரத்னேவின் விக்கெட்டை இழந்தது. அவர் 32 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. குசல் சில்வா, சங்ககாரா ஆகியோர் தலா 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.