

2012-13-க்கான இந்தியாவின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான பிசிசிஐ விருதுக்கு சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் ஜனவரி 11-ம் தேதி நடைபெறும் பிசிசிஐ விழாவில், அஸ்வினுக்கு இவ்விருது வழங்கப்படும்.
இந்திய கிரிக்கெட்டில் சீனியர் மற்றும் ஜூனியர் அளவில் மிகச் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்துவோருக்கு, ஆண்டுதோறும் பிசிசிஐ விருது வழங்கும்.
இதில் சீனியர் பிரிவில், சிறந்த ஆட்டக்காரருக்கு பாலி உம்ரிகார் விருது வழங்கப்படும். அந்த விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவரான ரவிச்சந்திரன் அஸ்வின் பெறுகிறார்.
அஸ்வின் விருதுக்கான காலக்கட்டத்தில் 8 டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இரண்டு அரைசதம் உள்பட 263 ரன்கள் சேர்த்திருக்கிறார். 18 ஒரு நாள் போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்திருக்கிறார். 4 சர்வதேச டி20 போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை சாய்த்திருக்கிறார்.
அஸ்வினுக்கு பாலி உம்ரிகர் விருது கோப்பையுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
முன்னதாக, இவ்விருதை சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோர் பெற்றுள்ளனர்.