விளையாட்டுத் துறை சாதனைகளால் இந்தியர்களின் மதிப்பு உயரும்: மோடி

விளையாட்டுத் துறை சாதனைகளால்  இந்தியர்களின் மதிப்பு  உயரும்: மோடி
Updated on
1 min read

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களைக் கவுரவப்படுத்திய பிரதமர் மோடி, விளையாட்டுத் துறையின் சாதனைகள் இந்தியர்கள் மீதான மதிப்பை உயர்த்தும் என்றார்.

"எந்த ஒரு நாடும் சுயமரியாதை மற்றும் பெருமை இல்லையெனில் முன்னேற்றமடையாது. மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை வெற்றிகரமாக அடைந்தது என்பது விஞ்ஞானிகளின் சாதனை, ஆனால் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை சேர்ப்பது. இது இந்தியாவுக்கு உலக அளவில் பெரும் அங்கீகாரத்தை வழங்குகிறது.

அதேபோல் விளையாட்டு வீரர்களின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையையும் கவுரவத்தையும் அளிப்பது.

ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், விளையாட்டில் இந்தியா சிறப்புறுவது எனக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.

என்னுடைய உற்சாகமும் விளையாட்டு வீர்ர்களின் உணர்வும் நாட்டுக்கு நன்மையையே விளைவிக்கும். இதுவரை உலக அளவில் போட்டியிடுவதற்கான தன்மைகளை வளர்த்தெடுப்பதில் நாம் சற்றே பின் தங்கியுள்ளோம். இந்த நிலை தற்போது மாறிவருகிறது. மாநிலங்கள் குறிப்பிட்ட விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன, விளையாட்டுப் பல்கலைக் கழகங்கள் அமைக்கின்றனர்.

விளையாட்டு வீரர்கள் என்னை தங்களது நண்பராகக் கருதி ஆலோசனைகளை வழங்கலாம், குறிப்பிட்ட முறையில் ஏதாவது பேச வேண்டுமென்றாலும் என்னை தொலைபேசியில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.

யாராவது ஒரு வீரர் செய்யும் தவறு நாட்டிற்கு அவப்பெயரைப் பெற்றுத் தந்து விடும், ஆகவே இதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் நாட்டிற்காகச் செய்யும் பங்களிப்பு போல் விளையாட்டு வீரர்களும் செய்ய முடியும்.

விருது பெறும் விளையாட்டு வீரர்கள் பேச்சுத்திறமை படைத்தவர்களாக இருந்தால் அவர்கள் பல்கலைக் கழகங்களில் பேச வேண்டும், இது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்" என்றார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in