Published : 06 Jun 2017 09:47 AM
Last Updated : 06 Jun 2017 09:47 AM

ஒருதலைபட்சமான வெற்றி; போராடாமலே வீழ்ந்தது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று முன்தினம் பிர்மிங்காமில் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எந்த ஒரு கட்டத்திலும் போராடும் குணத்துடன் செயல்படவில்லை.

வழக்கம் போல இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டத்தில் காணப்படும் ஒரு அனல் இந்த ஆட்டத்தில் இல்லை என்பதே பெருவாரியான ரசிகர்களின் கருத்தாக இருந்திருக்கக் கூடும். அவ்வவ்போது கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய மழையிலும் இந்த ஆட்டத்தை காண எட்பஸ்டன் மைதானத்தில் 24,156 ரசிகர்கள் குவிந்திந்தனர்.

இந்த மைதானம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதற்கு முன்னர் இவ்வளவு ரசிகர்களை கண்டதில்லை. மேகக் கூட்டங்கள் மாயாஜாலம் காட்டிய போதிலும் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 91, ஷிகர் தவண் 68 ரன்கள் சேர்க்க, கடைசி கட்டத்தில் அதிரடியாக விராட் கோலி 81 ரன்களும், யுவராஜ் சிங் 53 ரன்களும் விளாசினர். அதிலும் யுவராஜ் சிங் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிவேக அரை சதமாகவும் இது அமைந்தது.

இந்திய அணியின் பேட்டிங் கின் போது பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, அமைத்த களவியூகங்கள் கேள்விக்குரிய தாகவே உள்ளது. போதாக் குறைக்கு பந்து வீச்சு, பீல்டிங்கிலும் அந்த அணி வீரர்கள் படுமட்டமாக செயல்பட்டனர். ஜூனைத் கானுக்கு இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கொடுக்காமல் வகாப் ரியாஸை பெரிதும் நம்பினார் சர்ப்ராஸ்.

ஆனால் வகாப் ரியாஸோ 8.4 ஓவர்களை மட்டுமே வீசி 87 ரன்களை தாரைவார்த்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரலாற்றில், அதிக ரன்களை கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். முகமது அமிர் வீசிய முதல் ஓவரில் ரோஹித் சர்மா கடுமையாக திணற அந்த ஓவர் மெய்டனாக முடிந்தது.

சுமார் 6 மாதங்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மாவின் பதற்றத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் அணி தவறியது. வேகப் பந்து வீச்சுக்கு பெயர்போன பாகிஸ்தான் அணி 2-வது ஓவரிலேயே இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இமாத் வாசிமை கையில் எடுத்தது.

இந்திய அணி வீரர்கள் இடது கை சுழற்பந்து வீச்சுக்கு தயங்குவார்கள் என சர்ப்ராஸ் நினைத்தாரா என தெரியவில்லை. ஆனால் அவரது பந்து வீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவருக்கு பதிலாக ஆப் ஸ்டெம்புகளை குறிவைத்து வீசி நெருக்கடி கொடுக் கும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தி இருந்தால் தொடக்கத் திலேயே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

இமாத் வாசிம் வீசிய முதல் 8 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தாலும், தாக்கத்தை ஏற்படுத்தாத அவரது பந்து வீச்சை பயன்படுத்தி இந்திய தொடக்க வீரர்கள் களத்தில் தங்களை வலுவாக நிலை நிறுத்திக்கொண்டனர்.

அவரது பந்து வீச்சுக்கு தகுந்த படியும் சர்ப்ராஸ் பீல்டிங் அமைக்கவில்லை. அவசரகதியில் விரைவாக ஓவர்களை முடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினாரே தவிர, இந்திய வீரர்களை ஆட்டமிக்க செய்ய வைக்க வேண்டும் என்பதில் சர்ப்ராஸ் முனைப்பு காட்டவில்லை.

பீல்டிங்கிலும் பாகிஸ்தான் அணி மெச்சும்படி இல்லை. யுவராஜ் சிங் 8 ரன்களில் கொடுத்த எளிதான கேட்ச்சை ஹசன் அலி தவறவிட்டார். இதற்கான பலனை பாகிஸ்தான் அணி சரியாக அனுபவித்தது. 3-வது விக்கெட்டுக்கு அவர் கோலியுடன் இணைந்து 93 ரன்கள் குவித்தார். அதிலும் 10.2 ஓவர்களில். இதுதான் ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த ஆட்டத்தில் யுவராஜ் சிங் பேட்டிங் மட்டுமே பிரம்மிக்கத் தகுந்த வகையில் இருந்து. எத்தகைய பந்துகளையும் அடித்து ரன் சேர்க்க முடியும் என்பதை நிரூபிப்பதை போல அவர் விளையாடினார். தாழ்வான புல்டாஸ்களை சிக்சர்களுக்கும், பவுண்டரிகளுக்கும், ஏன் யார்க்கர்களையும் தோண்டி எடுத்து பவுண்டரிகள் அடிப்பதென்பது தனித்துவமான திறமையே.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும், ஷிகர் தவணும் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தாலும் அவர்கள் பேட்டிங்கில் இன்னும் சரியாக செட்டில் ஆகவில்லை என்பதை உணர்த்தியது. விராட் கோலியும் முழுபார்முக்கு திரும்பவில்லை. ரோஹித்துடன் இணைந்து சுமார் 12 ஓவர்கள் பேட் செய்த அவர் மந்தமாகவே ரன் சேர்த்தார்.

யுவராஜ் சிங் அதிரடியாக விளையாடிய நிலையில், கோலி ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த் தார். 43 ரன்களில் அவர் கொடுத்த கேட்ச்சை பஹர் சமான் கோட்டை விட்டார். கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் முகமது அமிர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தான், கோலியிடம் இருந்து அதிரடியை பார்க்க முடிந்தது. 58 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் அடுத்த 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார்.

கடைசி ஓவரில் இமாத் வாசிம் சிக்ஸர் அடிப்பதற்கு தகுந்த வகையிலேயே பந்துகளை வீசுவதுபோல் இருந்தது. இதை ஹர்திக் பாண்டியா அற்புதமாக பயன்படுத்தி 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் கிடைத்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 72 ரன்கள் குவித்தது.

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 41 ஓவர்களில் 289 ரன்கள் அடிக்க வேண்டும் என பாகிஸ்தான் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட போதே வலிமை இல்லாத பேட்டிங்கால் அந்த அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது போன்று தெரிந்தது. மேலும் ‘வருண பகவானும்’ பெரிய அளவில் கருணை காட்டவில்லை.

பாகிஸ்தான் பேட்டிங் அசார் அலி, பாபர் அசாம், அகமது ஷேசாத் ஆகியோரை நம்பியே இருந்து வருகிறது. இதில் அசார் அலி 50 ரன்கள் எடுத்தார், பாபர் அசாம் 8, ஷேசாத் 12 ரன்களில் வீழ்ந்தனர். அனுபவ வீரர்களான ஹபீஸ் 33, ஷோயிப் மாலிக் 15 ரன்களில் நடையை கட்டினர்.

அசார் அலிக்கு ஒரு கேட்ச் தவறவிடப்பட்டது. இருமுறை ரன் அவுட்டிலும் தப்பித்தார். எனினும் இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி தனது பேட்டிங்கை பெரிய இன்னிங்ஸ் ஆக மாற்ற தவறினார். சமீபகாலமாகவே பாகிஸ்தான் அணியிடம் பழைய ஆக்ரோஷத்தை காண முடியவில்லை.

கடந்த இரு ஆண்டுகளாகவே அந்த அணி அரிதாகவே வெற்றி பெற்று வருகிறது. அதிலும் கடைசியாக விளையாடி 12 ஆட்டங்களில் 250 ரன்களுக்கு மேல் இலக்கு சென்றாலே தோல்வியின் கோர பிடியில் சிக்குவது அந்த அணிக்கு வாடிக்கையாகிவிட்டது.

அசார் அலி, அகமது ஷேசாத், ஹபீஸ் ஆகியோரை தவிர மற்ற பேட்ஸ்மென்கள் 20 பந்துகளைக் கூட சந்திக்கவில்லை. மொத்தத்தில் எந்த வகையிலும் போராடாமல் பரிதாபமான ஒரு தோல்வியையே பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

இந்த ஆட்டதின் மூலம் முட்டாள் தனமான களவியூகங்களை சரிபார்க்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. நெருக்கடியான சூழ்நிலையிலும் இந்திய அணி பாகிஸ்தான் பந்து வீச்சை நொறுக்கி தள்ளியது.

இதனால் பந்து வீச்சு விஷயத்தில் இரட்டை சோதனையை பாகிஸ் தான் அணி செய்து கொள்ள வேண்டும். அதேவேளையில் பீல்டிங்கை மும்முறை சோதனை செய்துகொள்வது நல்லது. வேகப் பந்து வீச்சில் வரும் ஆட்டங் களிலாவது சிறந்த கூட்டணியுடன் களமிறங்குவது குறித்து யோசிக்க வேண்டும்.

பந்து வீச்சில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட் டனர். உமேஷ் யாதவ் 3, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்கள், புவனேஷ் குமார் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் வீழ்த்தாத போதும் 5 ஓவர் களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். இவர்களது கட்டுக்கோப்பான செயல்பாட்டா லேயே பாகிஸ்தான் அணியை 33.4 ஓவர்களில் 164 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது.

அதே வேளையில் பாகிஸ்தானை வென்றுவிட்டதனாலேயே இந்திய அணியின் பேட்டிங் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டது என்று கூறுவதற்கும் இல்லை. வரும் ஆட்டங்களில் சோதனை இன்னும் அதிகமாக காத்திருக்கிறது. எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கிடைத்த வெற்றி விராட் கோலியின் குழுவினருக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கவே செய்திருக்கும்.

அடி இடி போல் இருந்தது

வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “நான் ரன்கள் சேர்க்காத தருணத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை யுவராஜ் சிங் குறைத்தார். அவரது அதிரடி ஆட்டம் இடிபோல இருந்ததை என்னால் உணர முடிந்தது. பேட்டிங், பந்து வீச்சில் இந்திய அணியின் செயல்பாட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண்கள் வழங்குவேன்.

ஆனால் பீல்டிங் 6 மதிப்பெண்கள் தான் கொடுக்க முடியும். சிறந்த அணிகளுக்கு எதிராக கடினமாக போட்டியிட பீல்டிங்கில் நாங்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். பேட்டிங்கில் அனைத்து பேட்ஸ் மேன்களும் ரன்கள் சேர்த்தது மகிழ்ச்சியாக உள்ளது.

ரோஹித் சர்மா - ஷிகர் தவண் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. கடந்த முறை நாங்கள் பட்டம் வென்றபோது இந்த ஜோடி முக்கிய பங்கு வகித்தது. ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பது ஐபிஎல் தொடரில் இருந்து வேறுபட்டது. ஹர்திக் பாண்டியா 5 பந்துகளில் 20 ரன்கள் விளாசியது சிறப்பாக இருந்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியதாலேயே 4 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி னோம். அவர்கள் சுழற் பந்து வீச்சில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். மேலும் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் பெரும் பாலும் வலது கை மட்டை யாளர்கள். மற்ற அணிகளுக்கு எதிராக நாங்கள் இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கு வோம். இது எதிரணியின் திறனை பொறுத்து அமையும்” என்றார்.

கடைசி 8 ஓவரால் போச்சு

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறும்போது, “40 ஓவர்கள் வரை ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் கடைசி ஓவர்களில் அனைத்தையும் நாங்கள் இழந்தோம். பாராட்டுகள் அனைத்தும் இந்திய பேட்ஸ்மேன்களையே சேரும்.

கடைசி 8 ஓவர்களில் 106 ரன்கள் விளாசப்பட்டதால் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் சாய்ந்தது. பந்து வீச்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுப்பதை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அதிலும் கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x