

ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கான்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான டுவைன் ஸ்மித் 8, கேப்டன் சுரேஷ் ரெய்னா 6, இஷான் கிஷன் 34 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்குடன் இணைந்த ஆரோன் பின்ச் அதிரடியாக விளையாடினார். தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் பிராத்வெயிட் பந்தில் ஆட்டமிழந்தார்.
அமித் மிஸ்ரா ஓவரில் 2 சிக்ஸர்களும், ஜாகீர்கான், பிராத்வெயிட் ஓவர்களில் தலா ஒரு சிக்ஸரும் பறக்க விட்ட ஆரோன் பின்ச் 39 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன், 69 ரன்கள் விளாசிய நிலையில் முகமது ஷமி பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய ஜடேஜா 13, ஜேம்ஸ் பாக்னர் 14 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து 196 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி பேட் செய்தது.
தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 10 ரன்கள் எடுத்த நிலையில் பிரதிப் சங்வான் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரெய்னாவால் ரன் அவுட் செய்யப்பட்டார். 2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்து டெல்லி அணி நெருக்கடியை சந்தித்தது.
எனினும் ஸ்ரேயஸ் ஐயருடன் இணைந்து கருண் நாயர் அதிரடியாக விளையாடினார். அவர் 15 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்த நிலையில் பாக்னர் பந்தில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சாமுவேல்ஸ் 1, கோரே ஆண்டர்சன் 6 ஒரு ரன்களில் ஜடேஜாவால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிராத்வெயிட் 11 ரன்னில் குல் கர்னி பந்தில் நடையை கட்டினார். விக்கெட்கள் சரிந்த நிலையிலும் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளை யாடினார். அவர் 33 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார்.
டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டன. பாக்னர் வீசிய 17-வது ஓவரில் கம்மின்ஸ், ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விரட்ட 21 ரன்கள் சேர்க்கப்பட்டன.
வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப் பட்ட நிலையில் கம்மின்ஸ் (24), பாக்னர் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பாசில் தம்பி வீசிய 2-வது பந்தில் ஸ்ரேயஸ் ஐயர் போல்டானார். அவர் 57 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் விளாசினார்.
அடுத்த இரு பந்துகளையும் அமித் மிஸ்ரா பவுண்டரிக்கு விரட்ட டெல்லி அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அமித் மிஸ்ரா 8, முகமது ஷமி 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது.