Last Updated : 13 Jun, 2017 09:23 AM

 

Published : 13 Jun 2017 09:23 AM
Last Updated : 13 Jun 2017 09:23 AM

ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: கிர்கிஸ்தானுடன் இன்று இந்திய அணி மோதல்

ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா - கிர்கிஸ்தான் அணிகள் இன்று பெங்களூருவில் மோதுகின்றன.

சர்தேச அளவிலான போட்டி களில் இந்த ஆண்டில் 6 வெற்றி களை பெற்றுள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம் அணியை 2-0 என வீழ்த்திய இந்திய அணி, பிபா கால்பந்து தரவரிசை பட்டியலில் 100-வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் கிர்கிஸ்தான் தரவரிசை பட்டியலில் 132-வது இடம் வகிக்கிறது. ஆசிய கோப்பை தகுதி சுற்றில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தி தலா 3 புள்ளிகள் பெற்றன.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மியான்மரை தோற்கடித்திருந்தது. இதுதவிர இந்த ஆண்டில் கம்போடியா, நேபாளம் அணிகளை நட்பு ரீதியி லான ஆட்டங்களில் வென்றுள்ளது.

ஆனால் கிர்கிஸ்தான், இந்திய அணியை கடுமையாக சோதிக்கும் என கருதப்படுகிறது. மத்திய ஆசிய நாட்டை சேர்ந்த அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் சொந்த மண்ணில், மக்காவு அணியை 1-0 என தோற்கடித்திருந்தது.

இந்தியா - கிர்கிஸ்தான் அணிகள் இதற்கு முன்னர் 3 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 2007 மற்றும் 2009-ல் நடைபெற்ற நேரு கோப்பையில் இந்திய அணி, கிர்கிஸ்தானை வீழ்த்தி உள்ளது. அதேவேளையில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஏஎப்சி சாலஞ்ச் கோப்பையில் கிர்கிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது.

இன்றைய போட்டி நடைபெறும்  கன்டிரவா மைதானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2018-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் குவாம் அணியை வீழ்த்தியிருந்தது. ஆனால் கிர்கிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் இந்திய வீரர்களுக்கு கடும் சோதனையாக இருக்கக்கூடும்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான உடான்டா சிங், காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. இதேபோல் உள்ளூர் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிய சி.கே.வினீத்தும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை.

மும்பையில் கடந்த வாரம் நடைபெற்ற நேபாளம் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நட்சத்திர வீரரான சுனில் சேத்ரி இன்று களறமிங்குகிறார். நேபாளத்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடித்த அசத்திய ஜிஜே லால்பெக்குலா மீண்டும் அசத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுபவம் அற்ற தற்காப்பு வீரர்களான சந்தேஷ் ஜிங்கன், அனாஸ் எடதொடிகா ஆகியோர் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டுள்ளதால் கிர்கிஸ்தான் அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள் என நம்பப்படுகிறது.

அதேவேளையில் கிர்கிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களாக மிர்லான் முர்சாவ், விட்டலி லக்ஸ் ஆகியோர் திகழ்கின்றனர். இதில் முர்சாவ் தாக்குதல் ஆட்டத்தை தொடுக்கக்கூடியவர். கேப்டன் அஸாமத் பேமட்மோவ், தமிர்லான் ஆகியோர் சிறந்த தற்காப்பு வீரர்களாக உள்ளனர்.

இந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டன்டைன் கூறும்போது, “ கிர்கிஸ்தான் அணி அனுபவம் வாய்ந்ததாக உள்ளது. தரம், சிறந்த அனுபவம் கொண்ட வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். நான் கேள்விப்பட்ட வரை அந்த அணி வீரர்களில் பலர் ஐரோப்பிய நாட்டு கிளப் அணிகளில் விளை யாடுகின்றனர். இதுவே அவர்களின் திறமைக்கு சிறந்த அடையாளம். அவர்களிடம் இருந்து நல்ல போராட்டத்தை எதிர்பார்க்கிறேன். இதனால் இந்த ஆட்டம் எங்களுக்கு கடினமான சவாலாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x