

ஜமைக்கா டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் காயமடைந்ததையடுத்து வாய்ப்பு பெற்ற கே.எல்.ராகுல் 158 ரன்களை எடுத்ததில் சில சாதனைகளை புரிந்துள்ளார்.
3 இந்திய டெஸ்ட் தொடக்க வீரர்கள் தங்களது முதல் 3 சதங்களை இந்தியாவுக்கு வெளியே எடுத்துள்ளனர். ராகுல் தன் 3 சதங்களை, ஆஸ்திரேலியா, இலங்கை, மே.இ.தீவுகளில் எடுத்துள்ளார், சுனில் கவாஸ்கர் தனது முதல் 8 சதங்களை வெளிநாட்டில்தான் எடுத்தார். அதே போல் வினு மன்கட்டின் முதல் 3 சதங்கள் வெளிநாட்டில்தான் எடுக்கப்பட்டது. தற்போது ராகுல் இந்த உயர்மட்ட தொடக்க வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
1981-ம் ஆண்டு ஜமைக்கா சபைனா பார்க் மைதானத்தில் இங்கிலாந்தின் கிரகாம் கூச் 150+ ஸ்கோரை எடுத்த பிறகு தொடக்க வீரராக தற்போது ராகுல் 158 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இந்த மைதானத்தில் பங்கஜ் ராய்க்கு அடுத்த படியாக 150 ரன்களுக்கும் கூடுதலாக எடுத்துள்ள சாதனையையும் நிகழ்த்தினார் ராகுல். மொத்தமாகவே இதுவரை 9 தொடக்க வீரர்கள்தான் இங்கு 150 ரன்களை எட்டியுள்ளனர். இந்த மைதானத்தில் 1930-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த சந்தம் என்ற வீரர் எடுத்த 325 ரன்களே அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும்.
மேலும் ஆசியாவுக்கு வெளியே 150 ரன்களுக்கும் கூடுதலாக கடைசியாக எடுத்த இந்திய தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் 2009-ம் ஆண்டு நியூஸிலாந்தில் 167 ரன்கள் எடுத்தார். தற்போது ராகுல்.
தனது முதல் 3 அரைசதத்தை சதமாக மாற்றிய இந்திய வீரர்களில் அசாருதீன் மற்றும் தற்போது ராகுல் அடங்குவர். அசாருதீன் முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் கண்டவர்.
மே.இ.தீவுகளில் முதன் முதலாக அறிமுகப் போட்டியில் ஆடும் இந்திய வீரர்களில் பாலி உம்ரீகர் முதலில் 130 ரன்களை எடுத்ததே அதிகபட்சம். தொடக்க அறிமுக வீரராக 1996-97-ல் அஜய் ஜடேஜா 96 ரன்களை எடுத்தார். மற்ற டவுன் ஆர்டர்களில் அஸ்வின் கடந்த போட்டியில் சதம் எடுத்தது தன் அறிமுகப் போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் பாலி உம்ரிகரின் அறிமுக 130 ரன்களைக் கடந்து 158 ரன்கள் எடுத்ததோடு, மே.இதீவுகளில் முதல் டெஸ்ட் போட்டியை ஆடும் போது சதம் எடுத்த 5-வது இந்திய வீரரானார்.
மே.இ.தீவுகளில் தனது முதல் டெஸ்ட்டை ஆடும் தொடக்க வீரர் என்ற முறையில் முதல் டெஸ்டிலேயே அதிகபட்சமாக அங்கு ரன் எடுத்தது கிளென் டர்னர் என்ற நியூஸிலாந்து தொடக்க வீரர், இவர் 1971-72-ல் இதே மைதானத்தில் 223 ரன்கள் எடுத்தார், தற்போது இதே மே.இ.தீவுகளில் தன் முதல் டெஸ்டை ஆடும் ராகுல் 158 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார், தென் ஆப்பிரிக்க தொடக்க வீர்ரர் ஆண்ட்ரூ ஹட்சன் 163 ரன்களை பிரிட்ஜ்டவுனில் எடுத்துள்ளார்.