Last Updated : 11 Mar, 2014 01:17 PM

 

Published : 11 Mar 2014 01:17 PM
Last Updated : 11 Mar 2014 01:17 PM

மிசோரமுக்கு சந்தோஷ் டிராபி சாத்தியமானது எப்படி?

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற 68-வது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் சாம்பியன் ஆனதன் மூலம் 73 ஆண்டுகால பாரம்பரியமிக்க சந்தோஷ் டிராபி வரலாற்றில் சாம்பியன்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது வடகிழக்கு மாநிலமான மிசோரம்.

சந்தோஷ் டிராபி தகுதிச்சுற்று தொடங்குவதற்கு முன்னதாக நடப்பு சாம்பியனான சர்வீசஸ், கேரளம், பஞ்சாப், 31 முறை சந்தோஷ் டிராபியை வென்ற மேற்கு வங்கம் போன்ற அணிகள் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாகக் கருதப் பட்டன. ஆனால் யாருமே எதிர்பார்க்காத மிசோரம் அணி, தகுதிச்சுற்றிலேயே தனது பலத்தைக் காட்டியது. அந்த அணி தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டபோது சந்தோஷ் டிராபியை வெல்லும் வாய்ப்பு மிசோரமுக்கும் இருக்கிறது என்பதை மற்ற அணிகள் உணர்ந்தன.

12-வது அணி

சிலிகுரியில் நடைபெற்ற காலிறுதி லீக் சுற்றில் சர்வீசஸ், கேரளம் போன்ற அணிகளை பந்தாடிய மிசோரம், முதல் அணியாக அரையிறுதியை உறுதி செய்தது. இதனால் நடப்பு சாம்பியன் சர்வீசஸ், கேரளம் ஆகியவற்றின் கதை காலிறுதி லீக் சுற்றோடு முடிந்துபோனது.

மற்றொரு பிரிவில் தமிழகமும், ரயில்வேயும் சேர்ந்து கோவா, பஞ்சாப், மேற்கு வங்க அணிகளை வெளியேற்றின. அரையிறுதியில் பின்னடைவில் இருந்து மீண்டு தமிழகத்தை வீழ்த்திய மிசோரம், இறுதிச்சுற்றில் ரயில்வேயை தோற்கடித்து சந்தோஷ் டிராபியில் மகுடம் சூடிய 12-வது அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

கனவு நனவானது

1980-களின் மத்தியில் கால்பந்து விளையாட்டில் களம் கண்ட மிசோரம் அணி அடுத்த 30 ஆண்டுகளில் தேசிய சாம்பியன் (சந்தோஷ் டிராபி சாம்பி யன்) ஆகியிருக்கிறது. தமிழக அணி ஆரம்பகாலம் முதலே சந்தோஷ் டிராபியில் விளையாடி வந்தாலும்கூட, இதுவரை சாம்பியன் ஆனதில்லை. இருமுறை மட்டுமே (1973, 2012) இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. ஆனால் மிசோரம் அணி கால்பந்தில் கால்பதித்த 30 ஆண்டுகளில் சந்தோஷ் டிராபி கனவை நனவாக்கியிருக்கிறது.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாநிலமான மிசோரமுக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது? கடந்த 30 ஆண்டுகளாக மிசோரம் மக்களின் உயிர் மூச்சாகக் கருதப்படுவது கால்பந்து விளையாட்டுதான். மிசோரமின் வீதிகளில் எங்கு பார்த்தாலும் அங்கே கால்பந்து விளையாடப்படுவதை காணலாம். அங்கு கால்பந்துக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக 14, 16, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றவர்களில் சராசரியாக 10 பேர் மிசோரமைச் சேர்ந்தவர் களாகவே இருந்தனர். ஆனால் சீனியர் பிரிவுகளில் பெரிய அளவில் போட்டிகள் இல்லாததால் அவர்களால் ஜொலிக்க முடியாமல் போனது.

புரட்சி ஏற்படுத்திய எம்.பி.எல்.

இந்த நிலையில் 2012-ல் மிசோரம் மாநில கால்பந்து சங்கத்தால் தொடங்கப் பட்ட மிசோரம் பிரீமியர் லீக் (எம்.பி.எல்.) கால்பந்து போட்டி மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியதோடு, சீனியர் கால்பந்தட்ட வீரர்களின் வாழ்க்கையையும் புரட்டி போட்டது. ஐபிஎல் போட்டியைப் போன்று நடத்தப்பட்ட இந்த பிரீமியர் லீக் போட்டி இப்போது மிசோரமில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. ஏராள மான ரசிகர்களைப் பெற்றிருக்கிறது.

8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் மூலம் தலைசிறந்த வீரர்க ளும் அடையாளம் காணப்பட்டிருக் கிறார்கள். வீரர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்றவாறு பணம் வழங்கப் படுவதால், அவர்கள் பெருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். எம்.பி.எல். போட்டியின் மூலம் மிசோரம் மாநில அணிக்கும் தலைசிறந்த வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதனால்தான் மிசோரம் அணி இந்தியாவின் தலைசிறந்த அணியாக இப்போது உருவெடுத்தி ருக்கிறது.

நீங்கா நினைவுகள்

ஒரு குடும்பம்போல் முழு உத்வேகத் துடன் விளையாடிய மிசோரம் அணியினர், கடந்த 5 மாதங்களில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வாகை சூடியிருக்கிறார்கள். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான டாக்டர் டி.ஏ.ஓ. (தலிமெரான் ஏ.ஓ.) நினைவு கால்பந்து போட்டி வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த அணிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், அசாம், மேகாலயா, அருணாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டி.ஏ.ஓ. கால்பந்து போட்டியில் சாம்பி யன் பட்டம் வென்றது மிசோரம் அணி. சந்தோஷ் டிராபி காலிறுதி லீக் சுற்றுக்கு முன்னதாக டி.ஏ.ஓ. கால்பந்து போட்டியில் விளையாடியது மிசோரமுக்கு நல்ல பயிற்சி ஆட்டமாக அமைந்தது. அவர் களின் வெற்றிப் பயணம் இப்போது சந்தோஷ் டிராபி வரை வந்திருக்கிறது. எப்போதுமே முதல் வெற்றி என்பது முதல் காதலைப் போன்று சிறப்புமிக்கது.

சந்தோஷ் டிராபியை வென்ற மார்ச் 9-ம் தேதி மிசோரம் அணியினரின் மனதைவிட்டு எப்போதுமே அகலாது. இனிவரும் ஆண்டுகளில் மார்ச் 9-ம் தேதி வருகிறபோதெல்லாம் சந்தோஷ் டிராபியை வென்ற மகிழ்ச்சி, மிசோரம் வீரர்களின் மனங்களில் மணம் பரப்பிக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

19 மணி நேர பயணத்தைத் தாண்டி…

மிசோரமின் இந்த வெற்றிப் பயணத்தில் வீரர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவுக்கு ரசிகர்களின் பங்கும் இருக்கிறது என்று சொல்லலாம். சந்தோஷ் டிராபி போட்டி நடைபெற்ற சிலிகுரிக்கும், மிசோரமுக்கும் இடையிலான தூரம் சுமார் 1,050 கி.மீ. ஆகும். மிசோரமில் இருந்து சிலிகுரி கஞ்சன்சுங்கா மைதானத்துக்கு தரை மார்க்கமாக வரவேண்டும் என்றால் சுமார் 19 மணி நேரம் பயணித்தாக வேண்டும்.

பயணத் தொலைவு பல மணி நேரமாக இருந்தாலும்கூட அதையெல்லாம் பொருட்படுத்தாத மிசோரம் ரசிகர்கள் சிலிகுரிக்கு வந்து தங்கள் அணியை உற்சாகப்படுத்தினர். இதிலிருந்தே அவர்கள் கால்பந்தின் மீது வைத்திருக்கும் காதலின் அளவைப் புரிந்துகொள்ள முடியும். ரசிகர்களின் உற்சாகத்தால் உத்வேகம் பெற்ற மிசோரம் அணி, சந்தோஷ் டிராபியை வென்று தங்கள் மாநிலத்துக்கும் ரசிகர்களுக்கும் சமர்ப்பித்திருக்கிறது.

தமிழகத்திடம் போராடிய மிசோரம்

இந்த சந்தோஷ் டிராபி போட்டியில் சாம்பியன் ஆன மிசோரம் அணி, தான் விளையாடிய 9 போட்டிகளிலும் எல்லா அணிகளையும் எளிதாக வென்றாலும்கூட, போராடி வென்றது என்றால் அது தமிழகத்துக்கு எதிராக மட்டும்தான். அரையிறுதியில் முதல் பாதி ஆட்டத்தின் இஞ்சுரி நேரத்தில் கோலடித்து முன்னிலை பெற்ற தமிழக அணி, 62-வது நிமிடம் வரை மிசோரமை கோலடிக்கவிடவில்லை. அந்த ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்குப் பிறகே மிசோரம் வெற்றி கண்டது. ஒருவேளை அந்த ஆட்டத்தில் தமிழக கோல் கீப்பர் அருண் பிரதீப் தவறு செய்யாமல் இருந்திருந்தால் மிசோரம் சந்தோஷ் டிராபியை வெல்லும் வாய்ப்பை இழந்திருக்கும்.

மிசோரம் அணியும் தாங்கள் போராடி வென்றதை ஒப்புக்கொண்டது. தமிழகத்துக்கு எதிராக நாங்கள் இவ்வளவு போராட வேண்டியிருக்கும் என நினைக்கவில்லை. நாங்கள் இதுவரை விளையாடிய ஆட்டங்களில் இதுதான் கடினமானது என மிசோரம் வீரர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x