லண்டன் மைதானத்தில் மல்லையா; கேலி செய்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

லண்டன் மைதானத்தில் மல்லையா; கேலி செய்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
Updated on
1 min read

லண்டனில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியைக் காண வந்த விஜய் மல்லையாவை, இந்திய ரசிகர்கள் கேலி செய்தனர்.

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருக்கிறார். இதையடுத்து அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து அவரை கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்திய கோரிக்கைக்கு இணங்க அண்மையில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் விஜய் மல்லையவை கைது செய்தனர். ஆனால், அவர் கைதான அன்றே ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஜூன் 4-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண விஜய் மல்லையா வந்திருந்தார். அவர் போட்டியை ரசித்த காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பின.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் அறக்கட்டளை சார்பில் ஜூன் 5-ம் தேதி நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியிலும் மல்லையா கலந்துகொண்டார். விருந்து நிகழ்ச்சியில் அவரைக் கண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் தர்மசங்கடத்துக்கு உள்ளாகி, விழாவில் இருந்து விரைவாக வெளியேறினர்.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. போட்டியைக் கண்டுகளிக்க வந்த விஜய் மல்லையாவைப் பார்த்த இந்திய ரசிகர்கள் சிலர், ''திருடன், திருடன்'' என்று கூக்குரலிட்டனர்.

'மைதானத்துக்குள் திருடன்'

நீல நிற பிளேசர் அணிந்திருந்த மல்லையா, புகழ்பெற்ற ஜேக் ஹாப்ஸ் நுழைவுவாயில் வழியாக உள்ளே நுழைந்தார். அப்போது அவரைக் கண்ட இந்திய ரசிகர்கள் சிலர் ''திருடன், திருடன்'' என்று கத்தத் தொடங்கினர்.

ஒரு ரசிகர் அவரைப் படம் பிடிக்க, மற்றொருவரோ ''மைதானத்துக்குள் திருடன் நுழைவதைப் பாருங்கள்'' என்று கத்தினார்.

ஆனால் இதைப் பற்றிக் கவலைகொள்ளாத மல்லையா, தன்னுடைய வழக்கமான அலட்சியப் போக்குடனேயே இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in