

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் கலந்துகொள்ள 3 இந்தியர்கள் தகுதிபெற்றுள்ளனர்.
போலந்து அத்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட இந்திய வீரர் மொகமது அனாஸ் 45.40 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். இதன்மூலம் புதிய தேசிய சாதனை படைத்த அவர், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றார்.
இதே போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டும் பிரிவில் 8.17 மீட்டர் நீளம் தாண்டிய (ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற ஒருவர் 8.15 மீட்டர் நீளம் தாண்டவேண்டும் என்ற விதி உள்ளது) இந்திய வீரர் அங்கித் சர்மாவும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார். இவருடன் சேர்த்து ஒலிம்பிக்கில் நீளம் தாண்டுதல் பிரிவுக்கு உலக அளவில் மொத்தம் 24 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஸ்ரபானி நந்தா 23.02 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். இதன்மூலம் அவரும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார்.