Last Updated : 31 Mar, 2017 02:16 PM

 

Published : 31 Mar 2017 02:16 PM
Last Updated : 31 Mar 2017 02:16 PM

புஜாரா ஒரு ‘மவுனப் போராளி’: சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் பின் கள வீரர்கள் பங்களிப்பு குறித்து பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோரது பங்களிப்புகளை விதந்தோதினார்.

13 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 10 போட்டிகளில் வென்றது.

“இந்த சீசன் நம் அணிக்கு அபாரமாக அமைந்தது. சவாலான தருணங்களில் 7,8,9 நிலையில் இறங்கும் வீரர்கள் பெரிய அளவில் பங்களிப்புச் செய்தனர். இத்தகைய சவாலான தருணங்கள் வெற்றி எத்தரப்புக்கு வேண்டுமானாலும் திரும்பக்கூடிய தருணங்கள். ஆனால் இவர்கள் எதிரணியினரிடமிருந்து ஆட்டத்தைப் பறித்தனர்.

எந்த ஒரு அணியும், இம்மாதிரியாக பின் கள வீரர்கள் இறங்கி முக்கியத் தருணங்களில் ரன்கள் அடிக்கும் போதும், விக்கெட் கீப்பர் சதமெடுக்கும் போதும் அந்த அணி திடமான அணியாக உள்ளது என்றே அர்த்தம்.

எனவே முதல் 6 பேட்ஸ்மன்களோடு 7,8,9 நிலைகளில் இறங்கும் வீரர்களும் பங்களிக்க முடியும். விருத்திமான் சஹா இந்த சீசனில் 3 சதங்களை அடித்தது மிகப்பெரிய விஷயம். நெருக்கடி தருணங்களில் இவர்கள் நன்றாக விளையாடுவது டெஸ்ட் போட்டிகளை அல்லது சில வேளைகளில் தொடரையே தீர்மானித்து விடும். இதுதான் இந்த அணியில் நாம் பார்க்கும் வித்தியாசம்.

இரு அணிகளும் சரிசமமாக போட்டியிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு அணி போட்டியிலிருந்து நழுவும்போது நாம் வித்தியாசத்தைப் பார்க்கிறோம். அதுதான் நடந்தது.

நம் அணி முழு வலுவுடன் இருப்பது ஆரோக்கியமான ஒரு பிரச்சினை. அதாவது நம் பெஞ்ச் ஸ்ட்ரெந்த் வலுவாக உள்ளது, சாம்பியன் அணிகள் இப்படித்தான் உருவாகின்றன.

இந்த நம் அணியின் மீது எனக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

புஜாரா ஒரு மவுனப்போராளி, அபாரமான பொறுமை, அவரது அர்ப்பணிப்பும், கட்டுக்கோப்பும், இடையறாத கவனமும் அபாரமானது. நான் அவர் ஆடுவதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அப்போதே நினைத்தேன் இவர் நீண்ட காலம் இந்திய அணிக்குச் சேவை செய்வார் என்று.

13 டெஸ்ட் போட்டிகள் தொடர்ச்சியாக வீரர்கள் அர்ப்பணிப்புடனும், கட்டுக்கோப்புடன் செயல்பட்டதை எங்கள் காலங்களில் நான் கண்டதில்லை. அதுவும் உமேஷ் யாதவ் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். வேகப்பந்து வீச்சாளருக்கு இது கடினமானது. அவர் உடற்கோப்பை எப்படி பாதுகாக்கிறார் என்பது இதிலிருந்து புரிகிறது.

உமேஷ் யாதவ், அனுபவம் பெறப் பெற இன்னும் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் ஒரு பவுலர். அதிகம் வீசவீச அவர் மேலும் சிறப்பாகத் திகழ்கிறார். இந்த சீசனில் கடைசியில் அவர் வீசியது அவர் வீசியதிலேயே சிறந்த பந்து வீச்சு என்று நான் கருதுகிறேன்.

ரிவர்ஸ் ஸ்விங்கில் அபாரமாக திகழும் ஒரு பவுலர் இந்தியாவில் விக்கெட்டுகளை அதிகம் வீழ்த்த முடியும். தரம்சலாவிலும் ரிவர்ஸ் ஆனது. உமேஷ் யாதவ் குறைந்தது 2 அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளையாவது வீசினார்” என்று கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x