

அகில இந்திய டென்னிஸ் சங்க (ஏஐடிஏ) தலைவர் அனில் கண்ணாவை ராஜினாமா செய்யுமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கேட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதால் அவர் கடும் கோபமடைந்துள்ளார்.
ராஜினாமா தொடர்பான எந்த தகவலும் இதுவரை தனக்கு வரவில்லை என்று மறுத்துள்ள அனில் கண்ணா, வயது மற்றும் பதவிக்காலம் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டே தான் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விளையாட்டு சங்க நிர்வாகிகள் எத்தனை வயது வரை தேர்தலில் போட்டியிடலாம். எவ்வளவு காலம் நிர்வாகியாக பதவி வகிக்கலாம் என்பது உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றிய முதல் தேசிய விளையாட்டு அமைப்பு இந்திய டென்னிஸ் சங்கம்தான்.
மத்திய அரசின் விதிமுறைப்படி ஒரு சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளராக இருப்பவர்கள் 8 ஆண்டுகள் பதவியில் இருந்துவிட்டால், அவர்கள் தொடர்ந்து 3-வது முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகே அவர்கள் மீண்டும் போட்டியிட முடியும். ஆனால் தலைவர் பதவிக்கு அதுபோன்ற கால இடைவெளி எதுவும் கிடையாது.
ஒருவர் தொடர்ந்து 3 முறை அதாவது 70 வயது வரை பதவியில் இருக்கலாம். மத்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டே நான் ஏஐடிஏ தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அதைத் தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் எங்கள் சங்கத்தை அங்கீகரித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரிவிப்பதற்கு முன்னதாக மரியாதை அடிப்படையிலாவது மத்திய விளையாட்டு அமைச்சகம் எங்களுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.