Published : 29 Mar 2014 10:37 AM
Last Updated : 29 Mar 2014 10:37 AM

கெயில், சமி அதிரடியில் மே.இ.தீவுகள் த்ரில் வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மேற் கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டு, அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

கடைசி இரு ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கேப்டன் டேரன் சமி 3 சிக்ஸர்களையும், இரு பவுண்டரிகளையும் விளாசி மேற்கிந்தியத் தீவுக்கு வெற்றி தேடித்தந்தார்.

வங்கதேசத்தின் மிர்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் பிஞ்ச் 16, வார்னர் 20 ரன்களில் வெளியேற, கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு வந்த பிராட் ஹாட்ஜ் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. மே.இ.தீவுகள் தரப்பில் பத்ரீ, சாமுவேல்ஸ், சுநீல் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கெயில் விளாசல்

இதையடுத்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கெயில் ஆரம்பத்திலேயே அதிரடியில் இறங்கினார். கடந்த இரு போட்டிகளில் திணறிய அவர், மிட்செல் ஸ்டார்க் வீசிய இன்னிங்ஸின் 2-வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார்.

தொடர்ந்து வேகம் காட்டிய அவர் மேலும் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார். இதனிடையே ஸ்மித் 17 ரன்களில் ஆட்டமிழக்க, முதல் 5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது மே.இ.தீவுகள். 31 பந்துகளில் அரைசதம் கண்ட கெயில், 35 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது, மே.இ.தீவுகள் 12.1 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு சிம்மன்ஸ் 26, சாமுவேல்ஸ் 12 ரன்களில் வெளியேற, டுவைன் பிராவோவும், டேரன் சமியும் ஜோடி சேர்ந்தனர். மே.இ.தீவுகளின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 31 ரன் கள் தேவைப்பட்டன. மிட்செல் ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் சமி ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விரட்ட, அந்த ஓவரில் 19 ரன்கள் கிடைத்தன.

கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஃபாக்னர் வீசிய அந்த ஓவரின் முதல் இரு பந்துகளை வீணடித்த சமி, அடுத்த இரு பந்துகளில் இரு சிக்ஸர்களை விளாச, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது மே.இ.தீவுகள். 13 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த சமி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பிராவோ 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். 2-வது தோல்வியைச் சந்தித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x