வங்கதேசப் பந்துவீச்சு அபாரம்: நியூஸிலாந்து 265 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது

வங்கதேசப் பந்துவீச்சு அபாரம்: நியூஸிலாந்து 265 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது
Updated on
2 min read

கார்டிப் மைதானத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியை வங்கதேச அணி அருமையான பந்து வீச்சின் மூலம் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பைத் தக்க வைக்கும், தோல்வியடையும் அணி மூட்டையைக் கட்ட வேண்டியதுதான். நாளை (ஜூன் 10) ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் இன்று வெற்றி பெறும் அணியும் மூட்டையைக் கட்ட வேண்டியதுதான், மாறாக இங்கிலாந்து வெற்றி பெற்றாலோ அல்லது மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டாலோ இன்று வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் கார்டிப் மைதானத்தில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழலில் கேன் வில்லியம்சன் முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்தார், ஆனால் அது சரிவரக் கைகொடுக்கவில்லை.

தொடக்கத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானை ஆஃப் திசையில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் கப்தில். ஆனால் அடுத்த ஓவரை மஷரபே மோர்டசா மெய்டனாக்கினார். ஆனால் மஷரபே மோர்டசா இன்னிங்ஸின் 5-வது ஓவரை வீசும்போது லாங் ஆஃப் மேல் ஒரு சிக்சரையும், பாயிண்ட் கவர் இடையே ஒரு பவுண்டரியையும் விளாசினார் கப்தில். கப்தில் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 ரன்களை அடித்திருந்த போது நியூஸிலாந்து 7 ஓவர்கள் முடிவில் 46 ரன்களை எடுத்திருந்தது. அப்பொது 8-வது ஓவரை தஸ்கின் அகமது வீச அது வேகமாக சற்றே எழும்பும் பந்தாக அமைய மிட் ஆனில் கேட்ச் கொடுத்து லுக் ரோங்கி 16 ரன்களில் வெளியேறினார்.

வில்லியம்சன் இறங்கி 3 பவுண்டரிகளை அடித்தாலும் கப்தில் ஒரு முனையில் நல்ல பந்து வீச்சு மூலம் முடக்கப்பட்டார். கடைசியில் ரூபல் ஹுசைன் ஒரு பந்தை 140 கிமீ வேகத்தில் இன்ஸ்விங்கராக உள்ளே செலுத்த பந்தை தவறான லைனில் ஆடிய கப்தில் நேராக வாங்க எல்.பி.ஆனார். சிறிது நேரம் ரிவியூ செய்யலாமா என்று வில்லியம்சனிடம் ஆலோசனை நடத்தி அதனால் பயனில்லை என்று தெரிந்த பின் அங்கிருந்து பெவிலியன் சென்றார். கடைசி 10 பந்துகள் கப்திலுக்கு சரியாக அமையவில்லை. 12.5 ஓவர்களில் 69/2 என்று ஆனது நியூஸிலாந்து.

வில்லியம்சன், டெய்லர் இணைந்து சுமார் 17 ஓவர்களில் 83 ரன்களையே சேர்க்க முடிந்தது. அப்போது 69 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த கேப்டன் வில்லியம்சன் இல்லாத ரன்னுக்கு ஓடி தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். டெய்லர், நீல் புரூம் இணைந்து 8.4 ஓவர்களில் 49 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 82 பந்துகளைச் சந்தித்து 63 ரன்களை எடுத்த ராஸ் டெய்லர் தஸ்கின் அகமதுவிடம் வீழ்ந்தார். நியூஸிலாந்து 201/4 என்று ஆனது.

42-வது ஓவரில் கேப்டன் மஷ்ரபே மோர்டசா, பகுதி நேர ஆஃப் பிரேக் பவுலர் மொசாடெக் ஹுசைனை அறிமுகம் செய்தார். இவரை ஒரு ஓவர்தான் வீச அழைத்திருக்கலாம் ஆனால் இவரை அந்த ஓவரில் நியூஸிலாந்து சரியாக அடிக்க முயலவில்லை, இதனால் 5 ரன்களையே கொடுக்க 2-வது ஓவரையும் மோர்டசா கொடுத்தார், இது சரியான முடிவாக அமைந்தது. இவர் அந்த ஓவரில் 36 ரன்கள் எடுத்த நீல் புரூமை வீழ்த்தினார், ஒரு பந்து சென்ற பிறகு கோரி ஆண்டர்சனையும் வீழ்த்தினார். ஆண்டர்சன் டக் அவுட் ஆனார். பிறகு நீஷமையும் 46-வது ஓவரில் ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தி அசத்தினார்.

3 ஓவர்கள் 13 ரன்கள் 3 விக்கெட்டைக் கைப்பற்றிய மொசாடெக் ஹுசைன் திருப்பு முனையை ஏற்படுத்த நியூஸிலாந்து அணி 265 ரன்களையே எடுக்க முடிந்தது. இதில் 8 விக்கெட்டுகளை இழந்தது. மொத்தத்தில் அருமையான முறையில் வங்கதேசம் பந்துவீசி வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டுள்ளது.

ஆனால் மில்ன, சவுதி, போல்ட், நீஷம், கோரி ஆண்டர்சன் ஆகியோரை நியூஸிலாந்து எப்படி கையாள்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in