ஒலிம்பிக் 4X100மீ ரிலேவிலும் ஹாட்ரிக் தங்கம்: சாதனையுடன் விடைபெற்றார் உசைன் போல்ட்!

ஒலிம்பிக் 4X100மீ ரிலேவிலும் ஹாட்ரிக் தங்கம்: சாதனையுடன் விடைபெற்றார் உசைன் போல்ட்!
Updated on
1 min read

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆடவர் தடகளப ்பிரிவில் 4X100மீ ரிலே ஓட்டத்தில் கடைசி 100மீ ஓட்டத்தில் அபாரமாக ஓடி ஜமைக்கா அணி தங்கம் வெல்ல பெரும் பங்களித்தார் உசைன் போல்ட்.

இவரிடம் பேட்டனை கடைசி 100மீட்டருக்காக அளித்தவர் மற்றொரு ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் நிகெல் ஆஷ்மீட் என்பவராவார், அவரிடமிருந்து பேட்டனை பெற்ற உசைன் போல்ட் தனது போல்ட் ரக ஓட்டத்தில் முதலிடம் பிடிக்க ஜமைக்கா அணி 37.27 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றது.

இதன்மூலம் 120 ஆண்டுகால நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ. மற்றும் 200 மீ., 4*100 மீ. தொடர் ஓட்டங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் போல்ட்.

மூன்று ஒலிம்பிக் போட்டிகள், 3 தடகள ஓட்டப்பந்தயங்கள், 3 தங்கங்கள் என்று டிரிபிள் அடித்து சாதனை புரிந்துள்ளார் உசைன் போல்ட். உசைன் போல்ட் அதிவேகமாக ஓடியதால் 0.33 விநாடிகள் பின் தங்கிய ஜப்பான் வெள்ளியும் அமெரிக்கா வெண்கலமும் வென்றன.

வென்றவுடன் முழங்காலிட்டு கடைசியாக ஒரு முறை தடகளத்திற்கு முத்தமிட்டார் போல்ட். “நான் தான் கிரேட்டஸ்ட்” என்று முழக்கமிட்டார்.

“பேட்டனை வாங்கியவுடனேயே நாம்தான் வின்னர் என்று முடிவு கட்டினேன்” என்றார்.

ஜமைக்காவின் மற்றொரு வீரர் நிகேல் கடைசி ஓட்டத்திற்காக போல்ட்டிடம் மஞ்சள் நிற பேட்டனை கொடுக்கும் போது ஜப்பான் வீரர் அசகா கேம்பிரிட்ஜ் மற்றும் அமெரிக்க வீரர் டிரேய்வன் புரோமெல் ஆகியோரை விட ஒரு அடி பின் தங்கியே இருந்தார். ஆனால் இன்னமும் 70 மீ ஓட வேண்டிய நிலையில் உசைன் போல்ட் அனாயசமாக இவர்களைக் கடந்து வழக்கம் போல் கடிகாரத்தைப் பார்தார் போல்ட்.

2008 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் போல்ட், 100 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 200 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் 3 தங்கம் என மொத்தம் 9 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்தச் சாதனை ஒலிம்பிக் வரலாற்றில் உடைக்க முடியாத ஒன்றாக அமையும். மேற்கண்ட 3 போட்டிகளிலுமே உலக சாதனையும் போல்ட் வசமேயுள்ளது.

போல்ட் மைதானத்தில் இறுதியாக ஒரு முறை வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது இசை மேதை பாப் மார்லேயின் Jammin அரங்கத்தில் கேட்டது.

ஆம்! உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் இனி ஆட மாட்டார், அவரது கடைசி ஒலிம்பிக் போட்டியாகும் இது, இனி வரும் ஒலிம்பிக் போட்டிகள் போல்ட் இல்லாமல் எப்படி இருக்கும் என்பதை யோசிக்கவும் கடினமாகவே உள்ளது.

இனி இவரைப் போன்ற மேதை தடகள வீரரை இந்த உலகம் சந்திக்குமா என்ற கேள்வியை எழுப்பியபடி உசைன் போல்ட் விடைபெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in