

அதிக டெஸ்ட் சதங்களுக்கான பாகிஸ்தான் சாதனையை வைத்திருந்த இன்சமாம் உல் ஹக்கின் 25 சதங்களை இன்று யூனிஸ் கான் கடந்து சாதனை செய்துள்ளார்.
துபாயில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து சாதனை புரிந்த யூனிஸ் கான், அதிக டெஸ்ட் சதங்களுக்கான இன்சமாம் சாதனையைக் கடந்து முதலிடத்திற்கு வந்தார்.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை எடுத்த யூனிஸ் கான், 2வது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 103 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இதன் மூலம் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வீரர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை புரிந்தவர் என்ற பெருமையை பெற்றார் யூனிஸ் கான்.
மேலும் அவர் அடித்த 26-வது டெஸ்ட் சதமாகும் இது. இதனால் 25 சதங்கள் எடுத்து பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் சாதனையை தன் வசம் வைத்திருந்த இன்சமாம் உல் ஹக்கைக் கடந்து சென்று முதலிடம் வகிக்கிறார் யூனிஸ் கான்.
92 டெஸ்ட் போட்டிகளில் 164 இன்னிங்ஸ்களில் யூனிஸ் கான் 26 சதங்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 52.47 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிக டெஸ்ட் ரன்களில் இன்சமாம் இன்னமும் முன்னிலையில் உள்ளார். அவர் 119 டெஸ்ட் போட்டிகளில் 8829 ரன்களை எடுத்துள்ளார்.
யூனிஸ் கான் தற்போது டெஸ்ட் போட்டிகளில் 7,819 ரன்கள் எடுத்துள்ளார். எனவே இன்சமாம் உல் ஹக்கை இதிலும் கடந்து சென்று விரைவில் முதலிடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1974-ஆம் ஆண்டு நியூசிலாந்து பேட்ஸ்மென் கிளென் டர்னர் 101 மற்றும் 110 நாட் அவுட் என்று கிறைஸ்ட் சர்ச் மைதானத்தில் எடுத்ததே யூனிஸ் கானுக்கு முன்பு ஆஸி. அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ் சத சாதனையாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்த ஒரே இந்திய வீரர் விஜய் ஹசாரே. இவர் 1948ஆம் ஆண்டு அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 116 மற்றும் 145 ரன்களை எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்ததில்லை என்பது அவரிடமிருந்து விடுபட்ட சாதனைகளில் அரிய ஒன்றாகும்.
ஆக மொத்தம் 9 முறையே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 இன்னிங்ஸ்களிலும் ஒரு வீரர் சதம் எடுத்தது நிகழ்ந்துள்ளது. அதில் 3 முறை மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் எடுத்துள்ளனர். ரோஹன் கன்ஹாய் ஒரு முறை வால்காட் இருமுறை.
3 இங்கிலாந்து வீரர்கள் (டெனிஸ் காம்ப்டன், ஹாமண்ட், சட்கிளிஃப்) மற்றும் ஒரு இந்திய வீரர், ஒரு நியூசி. வீரர். தற்போது பாகிஸ்தான் வீரர்.