Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

அஸ்வினின் அமைதியான சாதனை!

ரவிச்சந்திரன் அஸ்வின் என்றதும் அவரது சுழல் பந்து வீச்சும் சென்னையுடன் அவருக்கு இருக்கும் நெருக்கமும்தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த மனிதர் சத்தம்போடாமல் ஒரு பெரிய சாதனையைச் செய்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுத்திருக்கிறார். ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் 419 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இவருக்கு அடுத்த நிலையில் 362 புள்ளிகளுடன் வங்காள தேசத்தின் ஷாகிப் அல் ஹஸனும் 332 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸும் இருக்கிறார்கள்.

அஸ்வின் பந்து வீசும் விதம் ஒரு நாள் போட்டிகளுக்கும் இருபது ஓவர் போட்டிகளுக்கும் அதிகம் பொருந்தும் என்று கருதப்படுகிறது. ஆனாலும் அவர் டெஸ்ட் போட்டிகளிலும் பிரகாசிக்கிறார். 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இவர், 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அனில் கும்ப்ளே 23 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளைக் கடந்தார். கபில்தேவ் 26 போட்டிகளில் கடந்தார். ஷேன் வார்னும் 24 போட்டிகளில்தான் கடந்தார். முத்தையா முரளிதரன் மட்டுமே 12 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கடந்திருக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியவில்லை. அதுபற்றிக் கருத்துக் கூறிய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி, ஆல் ரவுண்டரான ஜடேஜா இல்லாதது ஒரு இழப்புத்தான் என்று கூறியிருந்தார்.

இதற்கு கடந்த ஆண்டில் நடைபெற்ற நியூஸிலாந்து, ஆஸ்திரேலியத் தொடர்களில் ஜடேஜா பந்திலும் மட்டையிலும் பங்களித்திருந்ததை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆதங்கம் நியாயமானதாகவே தோன்றியது. ஆனால் இரண்டு டெஸ்ட்களிலும் சிறப்பாகப் பந்து வீசிச் சிறப்பாக மட்டையும் பிடித்த அஸ்வின் இந்தக் குறையைப் போக்கிவிட்டார். முதல் டெஸ்டில் அவர் அடித்த சதம் அணியின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றியது.

“அஸ்வினின் பேட்டிங் திறன் ஐந்து பந்து வீச்சாளர்களைக் கொண்டு ஆடுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது” என்று ராகுல் திராவிட் கூறியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பந்து வீச்சாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரன் அடிப்பது அவ்வப்போது நடப்பதுதான்.

ஆனால் அப்படி ரன் அடிப்பவர்கள் தங்களது பிரதான கடமையான பந்து வீச்சில் சோபிக்காவிட்டால் அணிக்குப் பயனில்லை. ஏனென்றால் 1,000 ரன்கள் அடிப்பதுகூட டெஸ்ட் போட்டியை வெல்வதற்கான உத்தரவாதம் அல்ல. 20 விக்கெட்களை எடுத்தாக வேண்டும்.

எனவே பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு டெஸ்ட் போட்டிக்கு மிகவும் இன்றியமையாதது. எனவேதான் பந்து வீச்சில் வீரியம் குன்றாமல் மட்டை வீச்சில் பிரகாசித்துவரும் அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வலுவாகத் திகழ்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x