

வதோதராவில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 குரூப்-சி போட்டியில் ரயில்வே அணியை டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
பரபரப்பான இந்த டி20 போட்டியில் ரயில்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை விளாச, இலக்கை விரட்டிய டெல்லி அணி கேப்டன் காம்பீரின் சொதப்பலுக்கு இடையேயும் 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்துள்ளது
டெல்லி அணி டாஸில் வென்று ரயில்வே அணியை பேட் செய்ய அழைத்தது. இதில் தொடக்க வீரர் டிஷெட்டி ரன் எடுக்காமல் மனன் ஷர்மா பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். 9/1 என்ற நிலையில் சவுரவ் வகாஸ்கர், முன்னாள் ஆர்சிபி வீர்ர் ஆசாத் பத்தான் இணைந்து டெல்லி பந்துவீச்சை புரட்டி எடுத்தனர். 95 பந்துகளில் 2-வது விக்கெட்டுக்காக 185 ரன்களை பறக்க விட்டனர்.
இதில் சவுரவ் வகாஸ்கர் என்ற இடது கை பேட்ஸ்மென் டெல்லிக்காக சீராக வீசிவரும் ஸ்பின்னர் மனன் ஷர்மா (4 ஓவர்களில் 55 ரன்கள்), பவன் நேகி (3 ஓவர்கள் 48 ரன்கள்) ஆகியோரை புரட்டி எடுத்தார். 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 30 பந்துகளில் அரைசதம் கண்ட வகாஸ்கர், அடுத்த 50 ரன்களை 21 பந்துகளில் விளாசினார். 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் அவர் 100 ரன்கள் எடுத்தார். கடைசியிலும் கன்னாபின்னா அதிரடி ஆட்டத்தில் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் அவர் 118 ரன்கள் எடுத்து 18-வது ஓவரில் ஒருவழியாக நேகி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
மறு முனையில் ஆசாத் பத்தான் 59 பந்துகளில் 10 அபாரமான பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். கேப்டன் கே.வி.சர்மா 3 ரன்கள் எடுக்க ரயில்வே அணி 20 ஓவர்களில் பெரிய ஸ்கோரான 210 ரன்களை வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்தது. ஆஷிஷ் நெஹ்ரா 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்தார் விக்கெட் இல்லை.
இலக்கைத் துரத்திய டெல்லி அணியில் கேப்டன் காம்பீர் (10) நீங்கலாக அனைவரும் பங்களிப்பு செய்ய 19.2 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் உன்முக்த் சந்த் 4 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 38 ரன்களை எடுக்க நிதிஷ் ரானா 15 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் விளாசினார்.
ஆனால், மிக அருமையாக விரட்டலை வடிவமைத்தார் வலது கை பேட்ஸ்மேன் ஆதித்யா கவுஷிக், அவர் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். மிடில் ஓவர்களில் அவர் அருமையாக ஆடினார்.
பவன் நேகி 18 பந்துகளில் 35 ரன்களையும், மிலிந்த் குமார் 17 பந்துகளில் 23 ரன்களையும் விளாச இருவரும் இணைந்து 4.5 ஓவர்களில் 61 ரன்களைச் சேர்த்தது வெற்றிக்கு வித்திட்டது.
20-வது ஓவரின் 2-வது பந்தில் அனுரீத் சிங்கை பவுண்டரி அடித்து முடித்தார் பவன் நேகி.