

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அக்டோபர் 7-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவு செய்திருந்தது.
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் வங்கதேசத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் 18 பேர் உயிரிழந்தனர். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வங்கதேசம் சென்று விளையாட தயக்கம் காட்டியது.
இதையடுத்து இங்கிலாந்து வாரிய அதிகாரிகள் வங்கதேசம் சென்று பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது இங்கிலாந்து வீரர்களுக்கு உயர் பாதுகாப்பு வழங்கப்படும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து வாரியம் வங்கதேசம் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. அதே சமயத்தில் வீரர்கள் வங்கதேசம் சென்று விளையாட விரும்பாவிட்டால், அவர்கள் தொடரில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.
வரும் 16-ம் தேதி வங்கதேச தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக கேப்டன் மோர்கன் மற்றும் முன்னணி பேட்ஸ்மேனான அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் நேற்று அறிவித்துள்ளனர். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. மோர்கன் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளதால் துணை கேப்டன் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தக்கூடும் என தெரிகிறது.