

2022-ம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க இந்தியா தகுதி பெறும் என மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பிரேசிலில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அதில் வழங்கப்படவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேபாளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா கொண்டு வரப்பட்டது ஃபிஃபா உலகக் கோப்பை. அது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சச்சின் கூறியதாவது:
படிப்படியாக ஏற வேண்டும்
2017-ம் ஆண்டில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் 2022-ல் நடைபெறும் சீனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க இந்தியா தகுதிபெறும் என்பதுதான் உண்மையான இலக்காக இருக்கும். நானும் அதையே நம்புகிறேன். உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக தீவிர கவனம் செலுத்துவது அவசியம். நாம் நேரடியாக 100-வது மாடிக்கு ஏறிவிட முடியாது. முதல் தளத்தில் இருந்து படிபடிப்படியாகத்தான் ஏறமுடியும். உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் பங்கேற்பது என்பது ஒரே இரவில் நடந்துவிடாது. மெதுவாகத்தான் நடக்கும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல 2017-ல் இந்தியாவில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி திறமையான இளம் வீரர்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.
உலகின் தலைசிறந்த அணிக்கு திறமையான வீரர்கள் தேவை. அவர்களை உருவாக்குவதற்கு ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சரியான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, இளம் வீரர்களுக்கு சரியான முறையில் பயிற்சியளிக்க வேண்டும். இதுபோன்ற அனைத்து விஷயங்களும் ஒருங்கிணையும்போது தொழில்முறை ரீதியிலான தலைசிறந்த அணி உருவாகும். அப்படியொரு அணியை உருவாக்கினால்தான் உலகின் தலைசிறந்த அணிகளுடன் போட்டியிட முடியும். படிப்படியாக நாம் முன்னேறும்போது வெற்றி நம் வசமாகும் என்றார்.
15 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுநீல் சேத்ரியின் அருகில் இருந்து போட்டியை ரசித்ததை நினைவுகூர்ந்த சச்சின், “சுநீல் சேத்ரி கால்பந்து போட்டியை பார்க்கும்விதம் அதைப் பற்றி புரிந்துகொண்டதில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. நான் கிரிக்கெட் வீரராக இருந்தாலும், மற்ற விளையாட்டுகளுக்கும் ஆதரவு தெரிவிப்பது மிக முக்கியமானது. 15 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியின்போது அதில் விளையாடிய வீரர்களுக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். அவர்களில் சிலர் 2022 உலகக் கோப்பையில் பங்கேற்பார்கள் என நம்புகிறேன்.
எளிதாக எடுக்கக்கூடாது
விளையாட்டில் பெரிய அளவில் சவால்கள் இருக்கும். நீங்கள் அனைவரும் உங்களின் எதிரணியினருக்கும் மதிப்பளிக்க வேண்டும். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சரியான உத்வேகத்தோடு விளையாடுவது முக்கியம். எல்லா அணிகளுமே கோப்பையை வெல்வதற்காக கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன. 100 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் நிச்சயம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்” என்றார்.
கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு உலகக் கோப்பை அறிமுக விழாவில் பங்கேற்பதற்காக முதல்முறையாக கொல்கத்தா வந்துள்ள சச்சின், “கொல்கத்தா மக்கள் அனைவரும் கோப்பையை பார்த்து ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
பொன்னான நேரம்
உலகக் கோப்பையை வென்று அதை கையில் பிடிப்பது என்பது ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் மிக உயரிய தருணம் என்று குறிப்பிட்ட சச்சின், “1983 எனது வாழ்க்கையில் மிக முக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் நின்ற கபில்தேவ் தனது கையில் உலகக் கோப்பையை வைத்திருப்பதைப் பார்த்தேன். அது எனது வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். நாமும் ஒரு நாள் இந்த நிலையை அடைய வேண்டும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
எனது கனவை நனவாக்க கடுமையாகப் போராட வேண்டும் என்று நினைத்தேன். அப்போதே அதற்கான முயற்சி தொடங்கியது. ஆனாலும் கனவு நனவாக 22 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதற்காக நான் கடுமையாக உழைத்ததோடு, நிறைய விஷயங்களை தியாகம் செய்யவும் தயாராகியிருந்தேன்.
2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக மும்பையில் வந்திறங்கிய தருணத்தை என்னால் மறக்க முடியாது. எனது மனைவியுடன் காரில் அமைதியாக சென்று, பின்னர் அணியினருடன் இணைந்தேன். இறுதிப் போட்டிக்கு முந்தைய இருநாட்கள் ஆலோசனைகள் நடந்தன. அப்போது அங்கு நிலவிய சூழல் அசாதாரணமானது.
உலகக் கோப்பை வெற்றி சிறப்பான ஒன்று. உலகக் கோப்பையை நான் கையில் வைத்திருந்த நேரம் பொன்னான நேரம். அதற்காகத்தான் விளையாடினேன். அதை வென்றபிறகு தான் என் வாழ்க்கை வட்டம் முழுமையடைந்ததை உணர்ந்தேன்.
பல்வேறு போட்டிகளுக்காக பல ஆண்டுகள் பல்வேறு நாடுகளுக்கு பயணித்திருந்தாலும், உலகக் கோப்பையை வென்றதுதான் மிக உயர்வான வெற்றி” என்றார்.