

செயிண்ட் லூசியா அவுட் ஃபீல்டில் பந்துகள் வேகமாகச் செல்லவில்லை, மெதுவாகச் சென்றது இதனால் ஸ்கோர் 234 ரன்களில் தேங்கியது, வேறு மைதானமாக இருந்திருந்தால் 260-270 என்று இருந்திருக்கும் என்கிறார் லோகேஷ் ராகுல்.
பிசிசிஐ.டிவி-யில் ராகுல் கூறியதாவது:
பேட்ஸ்மென்கள் நல்ல கட்டுக்கோப்புடன் ஆடினர் என்றே நான் கூறுவேன். தொடக்க விக்கெட்டுகள் விழுந்த நிலையில் 180-200 ரன்களுக்கு சுருண்டு போக வாய்ப்புகள் அதிகம். ஆனால் அஸ்வின், விருத்திமான் சஹாவின் இன்னும் முடியாத 108 ரன்கள் கூட்டணி நிச்சயம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். இது இந்த டெஸ்ட் போட்டியில் முக்கியமான பார்ட்னர்ஷிப்பாகும்.
ஈரப்பதமான பிட்ச், பந்துகள் வேகமாக பவுண்டரி செல்லாத அவுட் ஃபீல்ட் இவற்றில் 234 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் அதுவும் 126/5 என்ற நிலையிலிருந்து என்பது மிக முக்கியமானது.
பந்துகள் வேகமாக பவுண்டரிக்கு செல்லும் வேறு மைதானமாக இருந்திருந்தால் ஸ்கோர் நிச்சயம் 260-270 என்று இருந்திருக்கும். இனி இந்த ஸ்கோரிலிருந்து நல்ல ஒரு முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட வேண்டும். மீண்டும் வந்து வலுவாக பந்து வீச வேண்டும். மேற்கிந்திய பவுலர்களிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளோம். கட்டுக்கோப்புடன் வீச வேண்டும். பந்து வீச்சுக்கு உள்ள சாதக நிலைகளை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உள்ள பந்து வீச்சு வரிசை நம்மிடையே உள்ளது.
நான் களமிறங்கிய போது புதிய பந்து நன்றாக எழும்பியது, ஸ்விங் ஆனது. அதனால் அடித்து ஆட முடிவெடுத்தேன். இது எனக்கு நன்றாகவே கைகொடுத்தது, அரைசதம் எடுத்தேன், ஆனால் நான் அவுட் ஆனவிதம் துரதிர்ஷ்டவசமானது. இது எனக்கு ஒரு பாடம், இங்கிருந்து இன்னும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வேன்.
இவ்வாறு கூறினார் அவர்.