Last Updated : 01 Jul, 2016 04:59 PM

 

Published : 01 Jul 2016 04:59 PM
Last Updated : 01 Jul 2016 04:59 PM

போர்ச்சுக்கல் அணியின் வளரும் நட்சத்திரம் ரெனேட்டோ சான்சேஸ்

யூரோ 2016-ல் இறுதி 16 சுற்றில் குரேஷியா அணிக்கு எதிராக கலக்கிய இளம் கால்கள் காலிறுதியில் போலந்தை வெளியேற்றியது, அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரரான 18 வயது போர்ச்சுகல் வீரர் ரெனேட்டோ சான்சேஸ் போர்ச்சுகல் கால்பந்தின் எதிர்காலம் எனும் அளவுக்கு நிபுணர்களால் உயர்வாக விதந்தோதபடுகிறார்.

சான்சேஸ் தனது கால்பந்து கிளப் வாழ்க்கையை பென்ஃபிகா மூலம் தொடங்கினார். அக்டோபர் 2014-ம் ஆண்டு ரிசர்வ்களுக்காக தனது அறிமுக போட்டியில் ஆடினார். பென்பிகாவுக்கு 2015-ல் இவர் ஆடிய போதுதான் அந்த பிரிமியர் லீக் மற்றும் டசா டா லீகா தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றது. பிறகு ஜெர்மன் கிளப்பான பேயர்ன் மூனிக்கிற்கு இவர் 38.8 மில்லியன் டாலர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இளையோர் மட்ட ஆட்டத்தில் போர்ச்சுகலுக்காக 40 ஆட்டங்களில் ஆடி 8 கோல்களை அடித்துள்ளார் சான்சேஸ். மார்ச் 2016-ல் தான் இவர் சர்வதேச கால்பந்து போட்டியில் அறிமுகமாகிறார். தற்போது 18 வயதில் அவர் யுஏஃபா யூரோ 2016 தொடரில் நுழைந்து சர்வதேச தொடரில் நுழையும் இளம் வீரர் என்ற சாதனைக்குரியவரானார்.

தனது 8-வது வயதிலேயே கால்பந்தில் நுழைந்த சான்சேஸ் பெனிபிகா அணியின் இளையோர் குழுவில் தனது 9-வது வயதிலேயே இணைந்தார். படிப்படியாக தனது அதிரடி ஆட்டத்தினால் இவரை பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் போர்ச்சுக்கல் மூத்தோர் அணியில் நுழைத்தார்.

ஜூன் 14-ம் தேதி ஐஸ்லாந்துக்கு எதிரான 1-1 டிரா போட்டியில் கடைசி 19 நிமிடங்களுக்காக மவுட்டின்ஹோவுக்குப் பதிலாக இறங்கி ஆடினார். குரேஷியா அணிக்கு எதிராக நடப்பு யூரோ 2016 தொடரில் இறுதி 16 சுற்றில் கலக்கிய சான்சேஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

காலிறுதியில் கடினமான போலந்து தடுப்பணையை நானியுடன் ஒன்றிரண்டு முறை தட்டி ஆடி பிறகு இடது காலால் அடித்த ஷாட் கோல் ஆனது. இது சமன் செய்த கோல். பிறகு பெனால்டி ஷூட் அவுட்டில் ரொனால்டோவுக்கு அடுத்தது யார் ஷூட் செய்கிறார்கள் என்று பயிற்சியாளர் சாண்டோஸ் கேட்ட போது தானாகவே முன் வந்து கோல் ஷூட் செய்தார் சான்சேஸ். மீண்டும் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நடுக்களத்தில் வேகமாக இயங்கும் கால்கள் உடையவர் சான்சேஸ். தடுப்பாட்டம் தாக்குதல் ஆட்டம் என்று எந்த பணியைக் கொடுத்தாலும் அதனை ஏற்று அதில் சாதிக்கத் துடிக்கும் இளம் நட்சத்திரமாவார் சான்சேஸ். இவர் ஆடும் போது 18 வயது வீரர் ஆடுவது போல் இருக்காது, ஏனெனில் பாஸ்களில் அத்தனை துல்லியம், சாதுரியம் மற்றும் டிரிப்பிளிங்கில் அச்சுறுத்தும் வகையிலான நகர்வு, கோல் ஷூட் செய்யும் தைரியம் மற்றும் துல்லியம் ஆகியவை இவரது பிரகாசமான எதிர்காலத்திற்குரிய பண்புகள் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் சிறு வயதில் தானே பந்தை எடுத்துச் சென்று கோல் அடிக்க ஆவல் அதிகமாக இருக்கும், கோல்களை அடிக்கும் இளம் ஆர்வத்தில் நீண்ட தூரத்திலிருந்தே கோல் முயற்சி செய்யும் ஆர்வம் மிகுதியாக இருக்கும், ஆனால் இத்தகைய குணங்கள் எதுவுமின்றி அவர் அணியின் ஒரு அங்கமாக பாஸ்களை நம்புவது ஆச்சரியமாகவே உள்ளது.

இவரைப்பற்றி பயிற்சியாளர் சாண்டோஸ் கூறும்போது, “ரெனாட்டோ சான்சேஸ் அதிசயிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்று பார்த்தது ஒரு சிறு துளிதான் அவர் மூலம் பெருவெள்ளம் காத்திருக்கிறது.

நான் ரிகார்டோ கார்வால்ஹோ 18 வயதில் ஆடியபோதும் இதையேதான் கூறினேன். இன்னும் கொஞ்சம் அனுபவம் கூடினால் இவர் ஒரு அச்சுறுத்தும் அபாய வீரர்காக உருவெடுப்பார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x