Published : 12 Oct 2016 09:31 AM
Last Updated : 12 Oct 2016 09:31 AM

பிட்ச்கள் பற்றிய ஹர்பஜன் விமர்சனத்திற்கு விராட் கோலி பதில்

கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணி விளையாடி வரும் இந்திய பிட்ச்கள் முன் தயாரிக்கப்பட்ட ஸ்பின் பிட்ச்களாக இருக்கிறது என்று ஹர்பஜன் சிங் கூறியதற்கு விராட் கோலி பதில் அளித்தார்.

நியூஸிலாந்து தொடருக்கு முன்பாகவே நிறைய நேர்காணல்களில் ஹர்பஜன் சிங் இத்தகைய அணுகுமுறை நல்லதல்ல என்று எச்சரித்திருந்தார். மேலும் அனில் கும்ப்ளே, விராட் கோலி இருதரப்பினருக்கும் நியாயமான பிட்ச்களை அமைக்க வலியுறுத்தவும் கோரியிருந்தார்.

இந்திய அணி நேற்று ‘ஒயிட் வாஷ்’ சாதித்த இந்தூர் பிட்ச் பற்றியும் ஹர்பஜன் கருத்து தெரிவிக்கையில், இத்தகைய பிட்ச்களில் வீசியிருந்தால் தனது மற்றும் அனில் கும்ப்ளேயின் விக்கெட்டுகள் எண்ணிக்கை ‘வேறு விதமாக’ இருந்திருக்கும் என்று கூறினார்.

விராட் கோலியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, இந்த வெற்றிகளுக்குக் காரணம் பிட்ச்களா அல்லது வேறு ஏதாவதா என்று கேட்கப்பட்டது, இதற்கு கோலி பதிலளிக்கையில் “யார் இப்படிக் கூறியது?” என்றார். அதற்கு ஹர்பஜன் சிங் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பதில் கூற வந்தவர் ஹர்பஜன் என்றவுடன் சற்றே பின் வாங்கிவிட்டார். அதன் பிறகு சுதாரித்து பதில் கூறிய விராட் கோலி,

“பந்துகள் திரும்பும் பிட்ச்கள் என்றாலும் அதிலும் நன்றாக வீசினால்தான் வெற்றி பெற முடியும். சுழற்பந்து என்பது பவுலர் கையிலிருந்து வரும்போது எவ்வளவு சுழலுடன் வருகிறது மற்றும் பிட்ச் ஆன பிறகு பந்து என்ன ஆகிறது என்பதைப் பற்றியது. உலகக்கோப்பை டி20 போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக நாம் தோற்றது என் நினைவில் இன்னமும் உள்ளது. அப்போது நியூஸிலாந்து ஸ்பின்னர்கள் தரமான ஸ்பின்னர்களாக இருந்தனர் என்று கூறப்பட்டது. இப்போது அதையெல்லாம் பேச ஆளில்லை. அதே ஸ்பின்னர்கள்தான் விளையாடினர், ஏன் அவர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை? அப்படிபட்டதுதான் இதுவும். நம் வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கு சென்றாலும்தான் விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர்.

ஆனால் நாங்கள் எதைப்பற்றியும் புகார் கூறவில்லை. இதோ பாருங்கள்... சிமெண்ட் தரை பிட்ச் கொடுத்தால் கூட ரன்களை அடிப்பதற்கான மனநிலை இருந்தால்தான் அடிக்க முடியும். அப்படித்தான் இதுவும்.

எங்கள் திறமைகள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம் எந்த ஒரு பிட்சிலும் இத்தகைய திறமைகளை எந்த ஒரு அணிக்கு எதிராகவும் வெளிப்படுத்த முடியும்.

இதுதான் சரியானா திசையை நோக்கிய எங்களது முன்னெடுப்பு. எங்கள் திறமைகளைத்தான் நம்புகிறோமே தவிர, எங்களுக்கு ஒருதலைபட்சமாக சாதகமாகும் சூழ்நிலைகளை உருவாக்கி ஆடவில்லை. 2 டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களில் தரமான டெஸ்ட் பிட்ச்களில் முடித்து வென்றுள்ளோம். இதுதான் எங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையை அளிக்கிறது” என்றார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x