

ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியில் இரு மாற்றங்கள் இருந்தன.
ஹென்ரிக்ஸூக்கு பதிலாக முஸ்டாபிஜூர் ரஹ்மானும், பிபுல் சர்மாவுக்கு பதிலாக விஜய் சங்கரும் களமிறங்கினர். மும்பை அணியில் எந்தவித மாற்றமும் செய் யப்படவில்லை. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி ரன் கணக்கை மந்தமாக தொடங்கியது.
பவர் பிளேவில் 34 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன. இதன் பின்னர் அதிரடியாக விளையாடிய கேப்டன் டேவிட் வார்னர் 34 பந்து களில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரி களுடன் 49 ரன்கள் எடுத்த நிலை யில் ஹர்பஜன்சிங் பந்தில் ஆட்ட மிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 10.2 ஓவர்களில் வார்னர் - ஷிகர் தவண் ஜோடி 81 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய ஷிகர் தவண் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களில் மெக்லினகன் வீசிய புல்டாஸ் பந்தில் போல்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் 5 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார்.
அதிரடியாக விளையாடிய பென் கட்டிங் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய நமன் ஓஜா 9, விஜய் சங்கர் 1, ரஷித் கான் 2 ரன்களில் நடையை கட்டினர். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
மும்பை அணி தரப்பில் பும்ரா 3, ஹர்பஜன் 2 விக்கெட்கள் கைப் பற்றினர். 159 ரன்கள் இலக்குடன் பேட் மும்பை அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. பார்த்தீவ் படேல் 24 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 39 ரன்களும், கிருனல் பாண்டியா 20 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களும், நிதிஷ் ராணா 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசினர்.
ஜாஸ் பட்லர் 14, ரோஹித் சர்மா 4, பொலார்டு 11, ஹர்பஜன் சிங் 3, ஹர்திக் பாண்டியா 2 ரன்கள் ரன்கள் சேர்த்தனர். மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டத்தில் விளையாடிய அந்த அணி ஒரு தோல்வி கண்டுள்ளது. அதேவேளையில் ஹைதராபாத் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. அந்த இரு அணி ஆட்டத்தில் வெற்றி பெற் றுள்ளது.