

ராஞ்சியில் தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸி.கேப்டன் ஸ்மித் சாதனை சதமெடுக்க, மேக்ஸ்வெல் அரைசதம் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த ஸ்டீவ் ஸ்மித், தனது 19-வது டெஸ்ட் சதத்தை 13 பவுண்டரிகளுடன் எடுத்து 117 ரன்களுடனும், 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் கிளென் மேக்ஸ்வெல் 147 பந்துகளில் 82 ரன்களுடனும் முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்காக இதுவரை 47.4 ஓவர்களில் 159 ரன்களைச் சேர்த்துள்ளனர்.
முன்னதாக 2013 தொடரில் மைக்கேல் கிளார்க், மேத்யூ வேட் இதே 5-வது விக்கெட்டுக்காக சேர்த்த 145 ரன்களே ஆஸி. அணி இந்தியாவில் எடுத்த அதிகபட்ச கூட்டணி ரன்களாகும். இதனை ஸ்மித், மேக்ஸ்வெல் கூட்டணி தற்போது கடந்து சென்றது.
விராட் கோலி காயம்:
40-வது ஓவரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங் செய்யும் போது ஒரு பவுண்டரியைத் தடுத்தார் ஆனால் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, இதனால் முதல் நாள் ஆட்டத்தில் பாதி நாள் அவர் களத்தில் இல்லை, இது நிச்சயம் ஒரு பெரிய வேறுபாடுதான், கோலி களத்தில் இருந்தாரென்றால் வேறு, அவர் இல்லையென்றால் அது வேறு. இதன் பலனை முழுதும் ஸ்மித், மேக்ஸ்வெல் பயன்படுத்திக் கொண்டனர் என்றே கூற வேண்டும்.
ஆனால் அவர் காயம் அவ்வளவு கடுமையானது இல்லை என்பதால் நாளை அவர் களமிறங்குவதில் சிக்கலில்லை என்றே தெரிகிறது.
ஸ்மித் சாதனை:
சதம் எடுப்பதற்கு முன்னரே ஆஸி. கேப்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 97 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களைக் கடந்தார். இவருக்கு முன்னிலையில் டான் பிராட் மேன் 56 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களையும், மேத்யூ ஹெய்டன் 95 இன்னிங்ஸ்களிலும் 5,000 ரன்களைக் கடந்துள்ளனர், ஸ்மித் 3-வது இடத்தில் உள்ளார்.
மேலும் இந்தச் சதத்தின் இன்னொரு முக்கியச் சாதனை என்னவெனில் இந்தியாவில் ஒரே தொடரில் 2 சதங்களை எடுத்த ஒரே ஆஸ்திரேலிய கேப்டன் ஆனார் ஸ்மித், மேலும் மே.இ.தீவுகளின் கிளைவ் லாய்ட், இங்கிலாந்தின் அலிஸ்டர் குக் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான இந்தியாவில் ஆடும் தொடரில் 2 சதங்களை அடித்து ஸ்மித் 3-ம் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் இதுவரை 2 சதங்களை அடித்து சதம் அடித்த ஒரே வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.
டி.ஆர்.எஸ். சர்ச்சைக்குப் பிறகு, கோலியின் புகார்களுக்குப் பிறகு சதம் அடித்து நிரூபித்தாலும் அவர் அதனை பெரிதாகக் கொண்டாடவில்லை, முரளி விஜய் பந்தை பவுண்டரி அடித்து சதம் கண்ட ஸ்மித் தன் ஹெல்மெட்டைக் கழற்றி மட்டையை காண்பித்தார் அவ்வளவே. ஒருவேளை இன்னிங்ஸ் இத்துடன் முடிவடையவில்லை இன்னும் பெரிய இன்னிங்ஸாக மாறும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
ஸ்மித்தின் கவனமும், கட்டுக்கோப்பும் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்ததற்கு நேர் எதிரானது. பிட்சும் எதிர்பார்ப்புக்கு மாறாக முதல் நாளில் அவ்வளவு மோசமாக ஆடவில்லை. பவுன்ஸ் சீராக இருந்தது, ஸ்பின்னர்களுக்கு பந்துகள் பெரிய அளவில் திரும்பவில்லை.
காலையில் வார்னர், ரென்ஷா 9.4 ஓவர்களில் 50 ரன்கள் என்ற நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்து இருவருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் வெளியேறினர். ரென்ஷா குறிப்பாக தொடக்க இசாந்த், உமேஷ் ஸ்விங்கை திறம்பட எதிர்கொண்டார், வார்னருக்கு உமேஷ் வீசிய ஒரு பந்து மட்டைக்கு அருகில் எழும்பிச் சென்றது, வார்னர் அதிர்ச்சியடைந்தார். 19 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் ஜடேஜாவின் புல்டாஸை ஜடேஜாவிடமே கேட்ச் கொடுத்தார், பொதுவாக இப்படிப்பட்ட பந்துகளுக்கு கேட்சிற்காக ஒரு பவுலர் உஷாராக முடியாது, அதனால்தான் ஜடேஜாவின் இந்த கேட்ச் சிறப்பு வாய்ந்தது.
இரண்டு அருமையான பிளிக், ஒரு கட் என்று 7 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த ரென்ஷா, உமேஷ் யாதவ்வின் சற்றே விலகிச் சென்ற பந்தில் எட்ஜ் செய்து கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷான் மார்ஷ் 2 ரன்களில் அஸ்வினிடம் பேட்-பேடு கேட்சில் வெளியேறினார்.
ஹேண்ட்ஸ்கம்ப், ஸ்மித் இணைந்து 51 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். உமேஷ் யாதவ் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை அபாரமாக வீசி வந்த தருணத்தில் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஹேண்ட்ஸ்கம்ப் லேட் ஸ்விங் யார்க்கரில் காலில் வாங்கி எல்.பி.ஆனார். ஹேண்ட்ஸ்கம்பின் மட்டை பந்தின் திசைக்கு சரியாக வந்தாலும் அவர் காலை சரியான நேரத்தில் விலக்கிக் கொள்ளவில்லை, ஸ்மித் ரிவர்ஸ் ஸ்விங்கை ஆடுவதற்கும் ஹேண்ட்ஸ்கம்ப் ஆடுவதற்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
மேக்ஸ்வெல் இதற்கு முன்னர் எந்த வடிவமாக இருந்தாலும் அதிகம் சந்தித்த பந்துகள் 98 மட்டுமே, இன்று அதிகபட்சமாக 147 பந்துகளை சந்தித்துள்ளார். இன்று அவர் ரவீந்திர ஜடேஜாவை சிக்ஸ் அடித்து அரைசதம் அடித்தார் ஆட்ட முடிவில் 82 ரன்களுடன் இவர் நாட் அவுட்டாகத் திகழ்கிறார். ஸ்மித் 117 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.