

ஃபார்முலா 1 கார் பந்தய ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கர் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனியில் இருந்து வெளியாகும் “பில்ட்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஷூமாக்கரின் செய்தித் தொடர்பாளர் சபைன் ஹெம் கூறுகையில், “ஊகங்களுக்கு நாங்கள் பதிலளிக்கமாட்டோம்” என்றார். ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று உலக சாதனை படைத்தவரான ஷூமாக்கர் கடந்த டிசம்பர் 29-ம் தேதி பிரான்ஸின் ஆல்ப் மலைப் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த பாறையில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பிரான்ஸின் கிரினோபிள் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷூமாக்கர், தற்போது வரை கோமா நிலையி லேயே உள்ளார். அவரை இரு வாரங்களுக்கு முன்பு கோமாவில் இருந்து எழுப்பும் முயற்சியில் இறங்கிய டாக்டர்கள், “அது தொடர்பான சிகிச்சையை நிறைவு செய்ய கொஞ்ச நாள்கள் ஆகும்” என தெரிவித்திருந்தனர்.