

முக்கியக் கட்டங்களில் தோனியின் ஆலோசனைகள் புனே அணியை திறமையாக வழிநடத்த தனக்கு பெரிதும் உதவி புரிந்து வருவதாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக புனே அணி 160 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து வெற்றி பெற்ற போட்டியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் கிரீஸில் இருந்த போது கேப்டன் ஸ்மித் முன்னாள் கேப்டன் தோனியிடம் சென்று களவியூகத்தில் சில ஆலோசனைகளைப் பெற்றார், மும்பை அணி 3 ரன்களில் தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.
அதே போல் தோனியின் ஆலோசனையினால் 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்பது ஒரு ஓவரில் 17 ரன்கள் தேவை என்பதாக பென் ஸ்டோக்ஸினால் மாற்ற முடிந்தது.
அன்று ஆர்சிபி அணிக்கு எதிராகவும் தோனி பின்னாலிலிருந்து களவியூகத்தில் மாற்றம் செய்ததும் அதன்படி ஒரு விக்கெட் விழுந்ததை ஸ்மித், தோனி இருவருமே கொண்டாடி மகிழ்ந்ததையும் ரசிகர்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்.
இந்நிலையில் ஸ்மித் கூறும்போது, “தோனி மிக அருமையாக திகழ்கிறார் காரணம் அவருக்கு இந்த ஆட்டத்தின் போக்கு மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது. விக்கெட் கீப்பராக அவர் பந்து வீச்சாளரின் லெந்த், கோணம் ஆகியவை பற்றி ஆலோசனைகள் வழங்குவது அனைவருக்கும் மிக உதவிகரமாக உள்ளது.
மேலும் அவர் அணியினிடத்தில் என்னிடத்தில் பெரிய தாக்கம் ஏற்படுத்துவார் என்றே நம்புகிறேன்.
பேட்டிங்கிலும் மதிப்பு மிக்க பங்களிப்புகளை அவர் செய்து வருகிறார், அவர் பந்துகளை நன்றாகவே அடிக்கிறார், எனவே அவர் மிகப்பெரிய அளவில் பார்முக்குத் திரும்பி ஐபிஎல் முடிவுக்கட்டத்தை நெருங்கும் போது பெரிய அளவில் தாக்கமேற்படுத்துவார் என்றே கருதுகிறேன். அடுத்த 2 போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்றார்.