முடிந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்: இதயங்களை வென்ற திபா கர்மாகரின் உருக்கமான ட்வீட்

முடிந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்: இதயங்களை வென்ற திபா கர்மாகரின் உருக்கமான ட்வீட்
Updated on
2 min read

130 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முடிந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்" என்ற திபா கர்மாகரின் உருக்கமான ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஜிம்னாஸ்டிக்ஸ் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை திபா கர்மாகர் 4-வது இடம் பிடித்தார். அற்புதமாக தனது திறமையை வெளிப்படுத்தி நூலிழையில் வெண்கலத்தை தவற விட்டார். மொத்தமாக இவர் 15.066 புள்ளிகள் பெற்றார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "130 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால், மிகக் கடினமாக முயற்சித்தேன். முடிந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்" என மிக உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

ஜிம்னாஸ்டிக்ஸில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இந்திய வீராங்கனை சாதனை நிகழ்த்தியுள்ளதால் சமூக வலைத்தளங்களில் அவரது ட்வீட்டை பலரும் பகிர்ந்து அவருக்கு ஆதரவும் ஊக்கமும் தெரிவித்து வருகின்றனர்.

பதக்கத்திற்கு நெருக்கமாக வந்து தோல்வியைத் தழுவினாலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற திபா கர்மாகர்.

ஜிம்னாஸ்டிக்ஸில் சிமோன் பைல்ஸ் தங்கம் வென்றாலும், சமூக வலைத்தளத்தில் இப்போதைய ‘டிரெண்டிங்’ இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் என்றால் மிகையாகாது.

4-ம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தாலும், லட்சக்கணக்கான இந்திய இதயங்களை தனது ‘Produnova’ திறமையால் வென்றெடுத்துள்ளா தீபா கர்மாகர்.

ஜிம்னாஸ்டிக்ஸில் ஒலிம்பிக் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்றவுடன் ஒவ்வொரு வீட்டின் செல்லப் பெயராக தீபா கர்மாகர் பெயர் புழங்கத் தொடங்கியது. திரிபுராவைச் சேர்ந்த தீபா கர்மாகர் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கூகுள், சமூகவலைத்தளங்களில் தற்போது தீபா கர்மாகர் பெயர்தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. அவர் தனது ட்வீட்டில், “1.3பில்லியன் மக்களுக்காக வருந்துகிறேன், என்னால் பதக்கத்தை சாத்தியமாக்க முடியவில்லை. ஆனால் கடுமையாக முயற்சித்தேன். முடிந்தால் மன்னியுங்கள்” என்றார்.

இதனையடுத்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் சக விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று திபாவுக்கு ஆதரவுக்கரங்கள் குவிந்துள்ளன.

அதாவது பொதுவாக கருத்துகளில் பலதரப்பட விதங்களில் பிளவுண்டு கிடக்கும் ட்விட்டர் வாசிகள் திபாவுக்கு ஆதரவளிப்பதில் ஒன்று திரண்டுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் சேவாக் குறிப்பாக தனது ட்விட்டர் பதிவில் “நள்ளிரவில் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆட்டத்திற்காக உற்சாகமூட்ட எங்களை இணைத்தமைக்காக திபா கர்மாகருக்கு நன்றி. அதுவும் ஜிம்னாஸ்டிக்ஸுக்கு எந்த வித உள்கட்டமைப்பு வசதியும் இல்லாத நாட்டில் உங்களது திறமை மிகப்பெரிய பெருமை” என்று கூறியுள்ளார்.

பலரும் நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றதை இந்த சுதந்திர தின இரவில் சூசகமாகச் சுட்டிக்காட்டி, உலகமே உறங்கிக் கொண்டிருக்கையில் திபா கர்மாகர் என்ற லெஜண்டைப் பார்க்க இந்தியாவே விழித்திருந்தது என்று பலரும் ட்வீட் செய்துள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் ‘திபா கர்மானகர்’ என்று தவறாகக் குறிப்பிட்டு பின்பு இந்த ட்வீட்டை நீக்கி புதிய ட்வீட்டில் திபாவைப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் தோல்வியைத் தழுவினாலும் இது பலவிதங்களில் நாட்டுக்கும், திபாவுக்கும் வெற்றியே என்பதை உறுதி செய்யுமாறு பலர் அவருக்கு ஆதரவளித்த வகையில் பதக்கம் இல்லாவிடினும் கோடானுகோடி இதயங்களை வென்றிருப்பது அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் திபா நமக்கு தங்கம் கூட வென்று தரமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in