Last Updated : 04 Feb, 2017 10:13 AM

 

Published : 04 Feb 2017 10:13 AM
Last Updated : 04 Feb 2017 10:13 AM

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நாங்க யாருன்னு உலகத்துக்கு காட்டுவோம்: வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் சவால்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் எங்களால் என்ன செய்யும் முடியும் என்பதை இந்த உலகத்துக்கு காட்டுவோம் என வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.

முஷ்பிகுர் ரஹிம் தலைமை யிலான வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக வங்கதேச அணி இருநாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஜிம்கானா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஜூர் ரஹ்மான் காயம் காரணமாக இந்திய டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. போட்டி நடைபெறும் ஐதராபாத் மைதானம் அவருக்கு நன்கு பரிச்சயமானது.

இங்கு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய முஸ்டாபிஜூர் ரஹ்மான் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். இதனால் அவர் விளையாடாதது வங்கதேச அணிக்கு பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 'இஎஸ்பிஎன் கிரிக்இன்போ' இணையத்தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உலக கிரிக்கெட்டுக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் விளையாடப் போகிறோம் என்பது குறித்து எல்லாம் நாங்கள் சிந்திக்க வில்லை.

நாங்கள் விளையாடும் விதத்தை பார்த்து இந்தியாவே எங்களை அழைக்க வேண்டும் என விரும்புகிறோம். எங்களை பொறுத்தவரை இது மற்றொரு டெஸ்ட் போட்டி அவ்வளவுதான். இது வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி என்று நம்பவில்லை. அதுபோன்று அழைப்பது சிறிது ஆச்சர்யமாகவே உள்ளது.

உதாரணமாக நாங்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடும் போது எங்களுக்கு அதிக நெருக்கடி ஏற்படும். ஒருவேளை நாங்கள் அந்த அணிக்கு எதிராக தோல்வியடைந்தால் அதைவிட வெட்கக்கேடான விஷயம் ஒன்றும் இல்லை. தற்போது சிறந்த அணியாக இந்தியா வந்துள்ளோம். 5 வருடங்களுக்கு முன்பு இருந்த அணி போல் இல்லை.

சமீபத்தில் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தங்களது பார்மை தக்கவைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு அணியாக சிறந்த திறனை வெளிப்படுத்துவோம். கடந்த காலங்களில் சிறப்பாக செயல் படாத வீரர்களுக்கு இம்முறை சிறந்த முறையில் கணக்கை தொடங்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

அணியின் ஓட்டுமொத்த முயற்சிதான் நல்ல முடிவுகளை கொடுக்கும். இந்திய அணி வலிமையானது. சொந்த மண்ணில் எப்போதுமே அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். 2 அல்லது 3 நாட்கள் மட்டும் இல்லாமல் 5 நாட்களும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

எந்த மாதிரியான சூழ்நிலை நிலவினாலும் பிரச்சினை இல்லை. நாங்கள் பலம் பொருந்திய அணி யாகவே உள்ளோம். போதுமான வேகப் பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் உள்ளனர். ஆழமான பேட்டிங்கும் எங்களிடம் உள்ளது.

எங்களது பேட்ஸ்மேன்களால் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சுக்கு எதிராக சவால் கொடுக்க முடியும் என்று கருதுகிறேன். பந்து வீச்சை பொறுத்தவரையில் எங்களது வீரர்களுக்கு அனுபவம் போதாது. ஆனால் சில வீரர்கள் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டார்கள். ஒரு அணியாக சிறந்த திறனை நாங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில் எந்த ஒரு சிறந்த அணிக்கு எதிராகவும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும்.

இவ்வாறு முஷ்பிகுர் ரஹிம் கூறியுள்ளார்.

வங்கதேச அணி கடந்த 2000-ம் ஆண்டில் ஐசிசி-யின் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. அதன் பின்னர் தற்போதுதான் அந்த அணி முதன்முறையாக இந்தியாவில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x