

தனது 37-வது பிறந்த தினமான செவ்வாயன்று, இந்தியாவின் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகள் ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதனை அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெறும் மாஸ்டர்ஸ் டி20 தொடரில் பங்கேற்பதாக திங்களன்று சேவாக் தெரிவித்திருந்தார். அதில் பங்கு பெற சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
இதனையடுத்து துபாய் சென்று அந்தத் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் சேவாக் பங்கு பெற்றதையடுத்து சேவாக் ஓய்வு பெற்றார் என்று துபாய் நிருபர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.
இதனையடுத்து, தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் சேவாகுக்கு நெருங்கிய வட்டாரங்களில் தகவல் சேகரித்தபோது அவர் ஓய்வு பெறவில்லை என்ற தகவல் கிடைத்தது. ஆனால், துபாயிலிருந்து திரும்பிய சேவாக், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்த ரஞ்சி சீசன் முடியும் வரை ஹரியாணா மாநில கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
துபாயில் சேவாக் தெரிவிக்கும் போது, “முதல் தர கிரிக்கெட்டில் தொடர்வேன் என்று கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட் ஆடப்போவதில்லை. நான் ஓய்வு பெறுவேன். நான் இப்போது இதைக் கூற முடியும், அதிகாரபூர்வமாக இதனை அறிவிக்க வேண்டும்” என்று துபாயில் எம்சிஎல் கிரிக்கெட் நிகழ்ச்சியில சேவாக் தெரிவித்திருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங்கில் புதிய பந்துக்கு எதிராக பேட்டிங் உத்தியி புரட்சியைப் புகுத்தியவர் சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் 80 ரன்கள் என்று வைத்திருந்தவர். மார்ச் 2013-க்குப் பிறகு இவர் இந்திய அணியில் ஆடவில்லை, கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் மார்ச் 2013-ல் விளையாடினார்.
104 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சேவாக், 251 ஒருநாள் போட்டிகளிலும், 19 டி20 போட்டிகளிலும் ஆடி சுமார் 17,000 ரன்களை மொத்தமாக குவித்துள்ளார். தனது ஆஃப் ஸ்பின் மூலம் 136 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 104 டெஸ்ட் போட்டிகளில் 8,586 ரன்கள் 23 சதங்கள், 2 முச்சதங்கள், சராசரி 49.34. 251 ஒருநாள் போட்டிகளில் 8273 ரன்களை, 15 சதங்கள், 38 அரைசதங்களையும் 35.05 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.