

விளையாட்டு அமைப்புகளுக்கு அரசியல்வாதிகளும், தொழிலபதிர்களும் தலைமை ஏற்பதால், விளையாட்டுக்கு கெடுதல் ஏற்படுகிறது. எனவே அந்த அமைப்புகளை விளையாட்டு வீரர்களிடம் விட்டுவிடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்திய ஹாக்கி பெடரேஷன், ஹாக்கி இந்தியா ஆகிய 2 அமைப்புகளில், சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க யாரை அங்கீகரிப்பது என்பது தொடர்பாக சர்வதேச ஹாக்கி பெடரேஷன் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க கோரி இந்திய ஹாக்கி பெடரேஷன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், ஜெ.செலாமேஷ்வர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மேலும் கூறுகையில், “ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி, இன்று ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவதற்கே போராடுகிறது” என்றனர்.