Published : 12 Jun 2017 03:50 PM
Last Updated : 12 Jun 2017 03:50 PM

நான் நல்ல கேப்டன்தான்: என் தலைமையில் உலகக்கோப்பையை வெல்வோம்; டிவில்லியர்ஸ் உறுதி

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக தான் உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று ஏ.பி.டிவில்லியர்ஸ் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

“நான் நல்ல கேப்டன் என்பதால் இந்த அணியை முன்னே எடுத்துச் செல்ல முடியும். நான் உலகக்கோப்பையை இந்த அணியைக் கொண்டு வெல்வேன், இதனை நான் நம்புகிறேன். இந்தத் தொடரிலும் அந்த நம்பிக்கையுடன் தான் விளையாடினேன், இனிமேலும் நான் இதே நம்பிக்கையுடனேயே விளையாடுவேன், நான் கேப்டன்சியை நேசிக்கிறேன்.

எல்லா அடிப்படைகளையும் திறம்பட பூர்த்தி செய்துள்ளோம். இதில் சந்தேகத்திற்கிடமில்லை. நாங்கள் பயிற்சி முகாம்களாக நடத்திக் கொண்டிருந்தோம். வலையில் உண்மையிலேயே கடினமாக பயிற்சி மேற்கொண்டோம். நாங்கள் ஒருவரையொருவர் ஆதரிக்கிறோம், நம்புகிறோம். ஆனால் ஏதோ காரணங்களினால் தோல்விகள் திரும்பத் திரும்ப ஏற்படுகின்றன.

கணிப்பில் சில பிழைகள் செய்தோம், மற்றபடி ஓர்மையுடன் ஆடினோம். ஓரிரு தவறுகளுக்காக மோசமான விலையை கொடுக்க வேண்டியதாயிற்று. நான் அணியுடன் அனைத்து தருணங்களிலும் அமைதியாகவே பழகுகிறேன். சில நல்ல ஷாட்களை ஆடினோம், பிறகு மோசமான ஷாட்களையும் ஆடினோம். கணிப்பில் பிழைகள் செய்தோம், அதுதான் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ’

இது மனநிலை பொறுத்த விஷயமல்ல, நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பதே. தொடர்கள் எப்போதுமே வித்தியாசமானவை, வேறுபட்ட அணிகளுடன் வேறுபட்ட சூழல்களில் ஆட வேண்டியுள்ளது. இது ஒரு பெரிய சவால். இது எளிதானது என்று யாரும் கூறிவிட முடியாது.

ஆனால் இத்தகைய தொடர்களில் எங்களிடம் ஏதோ குறைபாடு ஏற்பட்டுவிடுகிறது, இது வருத்தமளிப்பதாகவே உள்ளது.

சரியாக என்ன நடக்கிறது என்பதை நான் உங்களிடம் விளக்க முடியவில்லை. இது ஆற்றல் குறித்ததோ, தீவிரம் குறித்ததோ அல்ல, இந்தியாவுக்கு எதிராக வெற்றி வாய்ப்ப்பு உள்ளது என்றே களமிறங்கினோம். வெல்வதற்காகத்தான் இங்கு வருகிறோம், ஆனால் என்னவென்று தெரியாமலேயே ஏதோ காரணத்தினால் அவிழ்ந்து வீழ்ந்து விடுகிறோம்.

தோல்வியடைந்த விதம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. நல்ல நிலையில் சில தீவிரமற்ற ஆட்டமிழப்புகள் என்னை வெகுவாக காயப்படுத்துகிறது.

அடுத்த தொடர் பற்றி யோசிக்கவில்லை. இந்தக் காயத்தை முதலில் ஆற்ற வேண்டும். ஏனெனில் இது மிகமோசமாக புண்படுத்தியுள்ளது. அடுத்த தொடர் பற்றிய எண்ணங்களையே இந்தத் தோல்வியின் காயம் முடக்கிவிட்டது.

அணியில் தீவிர மாற்றம் தேவையென்பதெல்லாம் பற்றி யோசிக்க ஆட்கள் இருக்கிறார்கள், ஆனால் நாங்கள் மோசமான கிரிக்கெட் அணி அல்ல.

நாங்கள் நெருக்கமானவர்கள், இதைச் சொன்னால் நிறைய பேர் என்னை நம்ப மாட்டார்கள், என்னை நம்புங்கள் நாங்கள் நெருக்கமாகவே இருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட ஆட்டத்துக்குப் பிறகு இதை ஏற்றுக் கொள்வது கடினமே. ஆனால் நான் இருதயபூர்வமாக உணர்வது என்னவெனில் நாங்கள் நெருக்கமான ஒரு அணியே. தேவைக்கதிகமான திறமைகள் உள்ளன. இதனை சரியாகப் பயன்படுத்தி சரியான தருணத்தில் எழுச்சி பெறுவதுதான் முக்கியம்” என்று கூறுகிறார் டிவில்லியர்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x