

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 உலகக் கோப்பைகளை பெற்றுத் தந்த தோனி, குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து கடந்த வாரம் விலகினார். இந்நிலையில் அவர் தலைமையிலான இந்திய ஏ அணி நேற்று முன்தினம் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.
கேப்டனாக தோனி பங்கேற்ற கடைசி போட்டி என்பதால் இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர். அவர்களுக்கு தனது அதிரடியால் தோனி விருந்து படைத்தார். கடைசி ஓவரில் 23 ரன்கள் விளாசிய தோனி 40 பந்துகளில், 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்தார்.
305 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் யுவராஜ் சிங், வீடியோ மூலம் தோனியுடன் கலந்துரையாடினார். அப்போது யுவராஜ் சிங், இனிமேல் அதிக சிக்ஸர்கள் அடிக்க முயற்சி செய்வீர்களா என கேட்டார்.
இதற்கு பதிலளித்த தோனி, “எனக்கு வசதிப்படும் பகுதியில் வீசப்படும் பந்துகளை, சூழ்நிலை அனுமதிக்கும் பட்சத்தில் நிச்சயம் சிக்ஸர்களாக விளாச முயற்சிப்பேன்’’ என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் தோனி கூறும்போது, “எனது கிரிக்கெட் பயணம் அற்புதமானதாக அமைந்திருந்தது. உங்களை (யுவராஜ் சிங்) போன்ற வீரர்களை அணியில் பெற்றிருந்ததால் பணி எளிதாக இருந்தது. 10 வருடங்களாக அனுபவித்து விளையாடினேன். இனிமேலும் அதுதொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.
2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் நீங்கள் (யுவராஜ் சிங்) ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசினீர்கள். அதை மறுமுனையில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
யுவராஜ் சிங் கூறும்போது, “நீங்கள் எப்போதுமே சிறந்த கேப்டன்தான். உங்கள் தலைமை யில் கீழ் விளையாடியது ஆச்சரிய மாக இருந்தது. மூன்று பெரிய சாம்பியன்ஷிப் கோப்பைகள், உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் போட்டியில் முதலிடம் ஆகியவை அனைத்தும் உங்கள் தலைமை யின் கீழ்தான் பெற்றோம். எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதற் காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
தோனியுடன் கலந்துரை யாடிய வீடியோவை சமூக வலை தளங்களிலும் பதிவிட்டுள்ளார் யுவராஜ் சிங்.