

ஸ்விட்சர்லாந்தின் பேசல் நகரில் நடைபெற்று வரும் ஸ்விஸ் இன்டோர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் ரோஜர் ஃபெடரர் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினை தோற்கடித்தார்.
ஸ்விஸ் இன்டோர்ஸ் டென்னிஸ் போட்டியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஃபெடரர் முதல் செட்டை இழந்தபோதும், பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்த இரு செட்களிலும் அபாரமாக ஆடி போட்டியை வெற்றியில் முடித்தார்.
போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் ஃபெடரர் தனது காலிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை சந்திக்கிறார். இந்த ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. டிமிட்ரோவ் தனது 2-வது சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக்கை தோற்கடித்தார்.
இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள மற்றொரு முன்னணி வீரரான பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட் 4-6, 2-6 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான மைக்கேல் லோட்ராவிடம் தோல்வி கண்டார். மற்றொரு ஸ்விட்சர்லாந்து வீரரான ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, முதல் சுற்றோடு வெளியேறிவிட்டார்.
இதனால் சீசனின் கடைசிப் போட்டியான ஏடிபி உலக டூர் பைனல்ஸில் விளையாடும் வாய்ப்பு ரோஜர் ஃபெடரருக்கு சற்று பிரகாசமாகியுள்ளது. தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ளவர்கள் மட்டுமே உலக டூர் பைனல்ஸில் பங்கேற்க முடியும். ஃபெடரர் தற்போதைய தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி கண்டது பற்றி பேசிய ஃபெடரர், “போட்டியின் தொடக்கத்தில் மிக மோசமாக விளையாடினேன். குறிப்பாக ஃபோர் ஹேண்ட் ஷாட்களில் நிறைய தவறுகளை செய்தேன். கடுமையாகப் போராடியபோதும், முதல் செட்டை கைப்பற்ற முடியவில்லை. எனினும் இறுதியில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற சவால் மிக்க போட்டிகளில் விளையாடுவது அவசியம்” என்றார்.
டெல் போட்ரோ வெற்றி
உலகின் 5-ம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் வைல்ட்கார்ட் வீரரான ஹென்றி லேக்சோனனைத் தோற்கடித்தார். இதேபோல் ஜப்பானின் கெய் நிஷிகோரி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் குரேஷியாவின் இவான் டோடிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.