

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ராஸ் டெய்லர் 129 ரன்கள் குவித்தார்.
நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி 24 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர்கள் பீட்டர் ஃபுல்டான் 6 ரன்களிலும், ஹமிஷ் ரூதர்ஃபோர்ட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து கேன் வில்லியம்சனுடன் இணைந்தார் ராஸ் டெய்லர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. 83 பந்துகளைச் சந்தித்த வில்லியம்சன் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் களம்புகுந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய டெய்லர் பவுண்டரி அடித்து அரைசதம் கண்டார். அவர் 80 பந்துகளில் 7 பவுண்டரிகள் உதவியுடன் அரை சதமடித்தார்.
தேநீர் இடைவேளையின்போது நியூஸிலாந்து 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது தேநீர் இடைவேளைக்கு முன்பு எடுத்திருந்த 37 ரன்களிலேயே மெக்கல்லம் ஆட்டமிழந்தார். மெக்கல்லம்-டெய்லர் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தது.
டெய்லர் சதம்
இதையடுத்து கோரே ஆண்டர்சன் களம்புகுந்தார். நிதானமாக ஆடியபோதும் சரியான பந்துகளை தவறாமல் தண்டித்த ஆண்டர்சன் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு வாட்லிங் பேட் செய்ய வந்தார்.
இதனிடையே டெஸ்ட் போட்டியில் தனது 10-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் டெய்லர். கடந்த போட்டியில் டெய்லர் இரட்டைச் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்து அணி 296 ரன்களை எட்டியபோது டெய்லர் ஆட்டமிழந்தார். அவர் 227 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்துள்ளது. வாட்லிங் 8, டிம் சௌதி 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டினோ பெஸ்ட் 14 ஓவர்களில் 66 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.