Published : 16 Jul 2016 09:53 AM
Last Updated : 16 Jul 2016 09:53 AM

1912 ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்: இறந்தபின் பதக்கம் பெற்ற ஜிம் தோர்ப்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் 1912-ம் ஆண்டு 5-வது ஒலிம்பிக் போட்டி மே 5 முதல் ஜூலை 22 வரை நடைபெற்றது. 28 நாடுகளைச் சேர்ந்த 48 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 2,408 பேர் கலந்து கொண்டனர். 14 விளையாட்டுகளில் 102 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டியில் ஜப்பான் அதிகாரப் பூர்வமாக கலந்துகொண்டது. இதன்மூலம் ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் ஆசிய நாடு என்ற பெருமையைப் பெற்றது.

இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 25 தங்கம், 19 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 63 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. போட்டியை நடத்திய ஸ்வீடன் 65 பதக்கங்களை குவித்தபோதும், அமெரிக்காவைவிட ஒரு தங்கம் குறை வாக வென்றதால் பதக்கப் பட்டியலில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஸ்வீடன் அணி 24 தங்கம், 24 வெள்ளி, 17 வெண்கலம் வென்றது. இங்கி லாந்து 10 தங்கம், 15 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களை வென்று 3-வது இடத்தைப் பிடித்தது.

11 மணி நேரம்

இந்த ஒலிம்பிக் போட்டியில் மார்ட் டின் கிளெய்ன்- ஆல்ஃபிரெட் அஸிகெய்னன் இடையிலான கிரோக்கோ-ரோமன் மல்யுத்தப் போட்டி 11 மணி நேரம், 40 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் விடாப்பிடியாகப் போராடிய மார்ட்டின் கிளெய்ன் இறுதியில் வெற்றி கண்டார். இதுதான் சர்வதேச அளவில் நீண்ட நேரம் நடைபெற்ற மல்யுத்தப் போட்டி.

அரையிறுதியில் நீண்ட நேரம் மோதி யதால் ஏற்பட்ட களைப்பின் காரணமாக மார்ட்டின் கிளெய்ன் இறுதிப் போட்டியில் இருந்து விலக நேர்ந்தது. இதனால் ஸ்வீடனின் கிளேயஸ் ஜோஹன்சன் இறுதி ஆட்டத்தில் களமிறங்காமலேயே தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மார்ட்டின் வெள்ளிப் பதக்கத்தோடு வெளியேறினார்.

இறந்தபின் பதக்கம்

இந்த ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர் ஜிம் தோர்ப் பென்டத்லான் மற்றும் டெகத்லான் போட்டிகளில் தங்கம் வென்றார். ஆனால் அமெச்சூர் விதிகளை மீறியதாகக் கூறி போட்டி முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு தோர்ப்பிடம் இருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டன. ஆனால், அவர் இறந்த 30 வருடங்களுக்குப் பிறகு அவர்தான் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டு அவருடைய வாரிசுகளிடம் 1983-ம் ஆண்டு பதக்கம் ஒப்படைக்கப்பட்டது.

தோர்ப், கால்பந்து, பேஸ் பால், கூடைப்பந்து போட்டிகளிலும் சிறந்து விளங்கியவர். ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக இரண்டு சீசன்களில் பேஸ் பால் விளையாடியதாலேயே விதிமுறைகளை மீறினார் என்று அவர் மீது குற்றம்சாட்டப் பட்டது. 41 வயது வரை தொழில்முறை வீரராக இருந்த தோர்ப், பின்னர் மன அழுத்தம் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு மதுவுக்கு அடிமையான அவர், 1954-ல் தனது 63-வது வயதில் உயிரிழந்தார். ஜிம் தோர்ப் இந்தியாவில் பிறந்தவர் என்ற குறிப்பும் உள்ளது. ஆனால் அவர் எங்கு பிறந்தார் என்பது உறுதியாக அறியப்படாமலேயே உள்ளது.

ஒலிம்பிக்கில் உயிரிழந்த முதல் வீரர்

இந்த ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் போர்ச்சுக்கல் வீரர் பிரான்சிஸ்கோ லஸாரோ ஓடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அப்போது கடும் வெயில் கொளுத்தியது. சூரியக் கதிர்களில் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக உடல் முழுவதும் சூரியக் கதிர் தடுப்பு களிம்புகளை பூசியிருந்தார். இதனால் வியர்வை வெளியேற வழியில்லாமல் உடல் வெப்பம் அதிகமானதால் அவர் உயிரிழந்தார். நவீன ஒலிம்பிக்கில் உயிரிழந்த முதல் வீரர் பிரான்சிஸ்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

64 வயதில் பதக்கம்

இந்த ஒலிம்பிக்கில் 64 வயதில் பங்கேற்ற ஸ்வீடன் துப்பாக்கி சுடுதல் வீரர் ஆஸ்கர் ஸ்வான் 100 மீட்டர் ரன்னிங் டீர் சிங்கிள் ஷாட் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்றார். இதேபோல் 100 மீட்டர் ரன்னிங் டீர் டபுள் ஷாட் பிரிவில் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமை ஆஸ்கர் வசமே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x