

இன்டியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் கோவாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா வென்றது. இதன்மூலம் 10 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
கோவாவிலுள்ள பட்ரோடா மைதானத்தில் நேற்று நடந்த ஐஎஸ்எல் போட்டியில் முதல் பாதியில் கோவா ஆதிக்கம் செலுத்தியது. 22 நிமிடத்தில் கோவாவின் ஆந்ரே சான்டோஸ் கோலடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில், கொல்கத்தா பதிலடி கொடுத்தது. 72-வது நிமிடத்தில் கவின் லோபோ கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். பின்னர், 84-வது நிமிடத்தில் மீண்டும் கோலடித்து கோவா ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தார்.
கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்க கோவா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வீணாயின. கூடுதல் நேரத்திலும் கோவா வீரர்களால் கோலடிக்க முடியவில்லை. இதையடுத்து 2-1 என்ற கணக்கில் கொல்கத்தா வென்றது. மொத்தம் 4 போட்டிகளில் ஆடியுள்ள கொல்கத்தா ஒன்றில் கூட தோற்காமல் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.