பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா

பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா
Updated on
2 min read

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் எஃப்46 பிரிவில் 63.97 மீட்டர்கள் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஜஜாரியா.

பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

2004 ஏதென்ஸ் பாராலிம்பிக்கில் கலந்துகொண்ட ஜஜாரியா, 62.15 மீட்டர்கள் தூரம் ஈட்டி எறிந்து தங்கத்தைக் கைப்பற்றினார்.

12 வருடங்கள் கழித்து 2016 ரியோ பாராலிம்பிக்கில் 63.97 மீட்டர்கள் தூரம் எறிந்த தேவேந்திர ஜஜாரியா,தன்னுடைய முன்னாள் ஒலிம்பிக் சாதனையை முறியடித்துள்ளார்.

ரியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 4-வது பதக்கம் இதுவாகும்.

ஏற்கனவே உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கமும், அதே பிரிவில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் பாட்டி வெண்கலமும் வென்றனர். குண்டு எறிதலில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார். இப்போது தேவேந்திர ஜஜாரியா புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பாராலிம்பிக் பயணம்

35 வயதான தேவேந்திர ஜஜாரியா தற்போது இந்திய விளையாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு மாவட்டத்தின் சிறு கிராமத்தில் பிறந்தவர் ஜஜாரியா. 2 முறை தங்கம் வென்ற அவருக்கு இடது கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய ஒன்பதாவது வயதில், மின் கசிவினால் இடது கையை இழந்தார் தேவேந்திர ஜஜாரியா. மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கேபிளைத் தவறுதலாகத் தொட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பெற்றோரின் ஆதரவுடன் விளையாட்டுப் பயிற்சியைத் தொடங்கியவர் முதலில் மாவட்ட அளவில் விளையாட ஆரம்பித்தார். 2002-ல் மாநில அளவில் தேர்வாகி பின்னர் ஏதென்ஸ் விளையாட்டில் தன் முதல் தங்கத்தை வென்றார். அப்போது அவருக்கு வயது 23. அதன் பின்னரும் தீவிர பயிற்சிகளை விடாத ஜஜாரியா, 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் தனது இரண்டாவது தங்கத்தை வென்று சரித்திரம் படைத்துள்ளார்.

அதன் பின்னர் 2013-ல் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

2008 மற்றும் 2012-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டிகளில் எஃப் 46 பிரிவு சேர்க்கப்படாததால் இந்த இரு தொடர்களிலும் ஜஜாரியா பங்கேற்கவில்லை. எனினும் தீவிர பயிற்சிகளை விடாத ஜஜாரியா 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் தனது இரண்டாவது தங்கத்தை வென்று வரலாறு படைத்துள் ளார்.

உலக தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ஜஜாரியா, 2004-ம் ஆண்டு அர்ஜூனா விருதையும், 2012-ல் பத்ம விருதையும் கைப்பற்றியுள்ளார். இந்த விருதுகளை வென்ற முதல் மாற்றுத்திறனாளி வீரரும் அவர்தான்.

பாராட்டு மழை

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜஜாரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடி:

வரலாறு படைத்த தேவேந்திர ஜஜாரியாவுக்கு வாழ்த்துகள். உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்.

சேவக்:

தேவேந்தருக்கு பாரா லிம்பிக் போட்டிகள் பியாராலிம்பிக் போட்டிகளாக மாறிவிட்டது. 2004-க்கு பிறகு உலக சாதனையுடன் தங்கம் வென்றது சிறப்பானது.

அபினவ் பிந்த்ரா:

தேவேந்த ருக்கு எனது வாழ்த்துக்கள், எங்களை மிகவும் உற்சாகப்படுத் தியுள்ளீர்கள்.

சாக்‌ஷி மாலிக்:

பாராலிம்பிக்கில் தங்கம் வென்றதற்காக எனது வாழ்த்துக்கள். இந்தியாவை பெரு மையடையச் செய்துவிட்டீர்கள்.

ரகானே:

பாராலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்துள்ள தேவேந்தருக்கு எனது வாழ்த் துக்கள்.

ராஜ்யவர்தன் ரத்தோர்:

வாழ்த்துகள் ஜஜாரியா. நீங்கள் வென்ற தங்கப் பதக்கம் மேலும் பல வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும்.

ரோகன் போபண்ணா:

சொந்த சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்துகள். உங்களால் நாடு பெருமை அடைந்துள்ளது.

இதற்கிடையே தங்கப் பதக்கம் வென்ற ஜஜாரி யாவுக்கு, ராஜஸ்தான் அரசு ரூ. 75 லட்சம் பரிசுத்தொகை அறிவித் துள்ளது. மேலும் ஜெய்ப்பூரில் 200 சதுரடி நிலமும், கங்கா நகரில் 25 'பிஹா' நிலமும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in