Published : 29 Jan 2014 12:00 PM
Last Updated : 29 Jan 2014 12:00 PM

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ்: சென்னையில் பிப்.1-ல் தொடக்கம்; சோம்தேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் சார்பில் ஸ்ரீராம் கேபிட்டல்-பி.எல்.ரெட்டி நினைவு ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஆடவர் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் நடைபெறும் இப்போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் அழகப்பன், அகில இந்திய டென்னிஸ் சங்க துணைத் தலைவர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:

இந்தப் போட்டியில் இந்தியா, ரஷியா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியாவின் முதல் நிலை வீரரான சோம்தேவ், இரண்டாம் நிலை வீரரான யூகி பாம்ப்ரி உள்ளிட்ட 22 பேர் பிரதான சுற்றுக்கு நேரடித்தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஆகியோருக்கு வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளன.

இவர்களில் சாகேத் மைனேனி தவிர மற்ற 3 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அவர்கள் 3 பேருக்கும் வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் இந்தியாவின் சனம் சிங், ரஞ்சித் விராலி முருகேசன், விஜய் சுந்தர் பிரசாந்த், பிரனேஷ் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர். இவர்கள் தகுதிச்சுற்றில் விளையாடுவார்கள். சோம்தேவ், யூகி பாம்ப்ரி, சனம் சிங், ஜீவன், மைனேனி ஆகியோர் டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பவர்கள் ஆவர். ராம்குமார் டேவிஸ் கோப்பை அணிக்கான மாற்று வீரர் ஆவார்.

தகுதிச்சுற்று போட்டிகள் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகின்றன. பிரதான சுற்று போட்டிகள் பிப்ரவரி 3-ம் தேதி தொடங்குகின்றன. இரட்டையர் இறுதிப் போட்டி பிப்ரவரி 7-ம் தேதியும், ஒற்றையர் இறுதிப் போட்டி பிப்ரவரி 8-ம் தேதியும் நடைபெறுகின்றன. இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.31 லட்சத்து 37 ஆயிரம் ஆகும். போட்டியைக் காண அனுமதி இலவசம் என்று அவர்கள் கூறினர்.

புள்ளிகள் எவ்வளவு?

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு 80 ஏடிபி புள்ளிகள் கிடைக்கும். இறுதிச்சுற்று வரை முன்னேறும் வீரருக்கு 48 புள்ளிகளும், அரையிறுதி வரை முன்னேறும் வீரர்களுக்கு 29 புள்ளிகளும், காலிறுதி வரை முன்னேறும் வீரர்களுக்கு 15 புள்ளிகளும் கிடைக்கும். ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளுக்குமே இது பொருந்தும்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு…

ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சென்னையில் நடைபெறுகிறது. கடைசியாக 1996-ம் ஆண்டு சென்னையில் ஏடிபி சேலஞ்சர் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு ஆண்டுதோறும் ஏடிபி 250 (சென்னை ஓபன்) டென்னிஸ் போட்டி நடைபெற்றாலும், ஏடிபி சேலஞ்சர் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் இப்போது ஏடிபி சேலஞ்சர் போட்டி நடைபெறுகிறது. இது தமிழக டென்னிஸ் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x