எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் கிடையாது: விஜய் கோயல்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் கிடையாது: விஜய் கோயல்
Updated on
1 min read

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும்வரை பாகிஸ்தான் - இந்தியாவுக்கிடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாக பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரிகள் பங்கேற்ற பேச்சு வார்த்தை துபையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் கூறும்போது, "பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக எந்த முன்னெடுப்புகளையும் எடுக்கும் முன் அதனை பிசிசிஐ மத்திய அரசிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும்வரை இந்தியா - பாகிஸ்தான் இடையே இரு தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்பதைத் தெளிவாக கூறிக் கொள்கிறேன். இதில் சர்வதேசப் போட்டிகள் பற்றி குறிப்பிடவில்லை" என்றார்.

தீவிரவாதத் தாக்குதல் காரணமாக 2012-ம் ஆண்டிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டது.

அதன்பின்னர், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே 2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டம் வரை 6 முறை இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்துவது என கடந்த 2014-ம் ஆண்டு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பாகிஸ்தானுடன் இந்தியா மொத்தம் 6 கிரிக்கெட் தொடர்களை விளையாட வேண்டும். இதில் 4 தொடர்கள் பாகிஸ்தானில் நடை பெறவிருந்தன. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை தாண்டி தாக்குதல்கள் நடத்தி வருவதால் இருதரப்பு கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி ஒப்பந்தத்தை மதிக்கவில்லை, ஒப்பந்தத்தின்படி கிரிக்கெட் தொடர் நடைபெறாததால், கிட்டத்தட்ட 449 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாகவும், அதற்குரிய நஷ்டத்தை அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு நோட்டீஸ் அளித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in