

19-வது ஆசிய தனிநபர் சாம்பி யன்ஷிப் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிகள் வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமி தளத்திலும், எக்ஸ்பிரஸ் அவென்யூவிலும் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். ஹாங்காங்கை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகளான மேக்ஸ் லீ, அனி ஆகியோருக்கு இந்த தொடரில் முதல் நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஆடவர் பிரிவில் சவுரவ் கோஸல், வேலவன் செந்தில் குமார், விக்ரம் மல்கோத்ரா, மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சாந்து, ஆதித்யா ஜகதாப் ஆகியோரும் மகளிர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், சச்சிகா இங்கலே, சுனைனா குருவிலா, ஊர்வசி ஜோசி, லக் ஷயா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து ஆடவர் பிரிவில் 4 வீரர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டி ருந்தது. ஆனால் இவர்களுக்கு இந்திய அரசு விசா வழங்கவில்லை. இதனால் பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. இந்த தொடரில் சென்னையை சேர்ந்த இளம் வீரரரான வேலவன் செந்தில் குமார் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் ஜூனியர் ஓபனில் பட்டம் வென்றிருந்தார்.
வேலவனுடன் சவுரவ் கோஸல், ஜோஷ்னா, தீபிகா ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். வேல வனை தவிர்த்து மற்ற 3 பேரும் ஆசிய தனிநபர் சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் தொடரில் இதற்கு முன்னர் அரை இறுதி வரை முன்னேறி உள்ளனர். அதிலும் ஜோஷ்னா 3 முறை அரை இறுதிவரை சென்றுள்ளார்.
இம்முறை 9 முறை சாம்பிய னான மலேசியாவை சேர்ந்த நிக்கோல் டேவிட் கலந்து கொள்ளாததால் ஜோஷ்னா, தீபிகா ஆகியோர் பட்டம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஜோஷ்னா கூறும்போது, “சொந்த இடத்தில் விளையாட உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களின் ஆதரவு கிடைப்பது சிறந்த விஷயம். சிறந்த பார்மில் இருப்பதால் சிறப்பாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.