Last Updated : 24 Oct, 2014 10:54 AM

 

Published : 24 Oct 2014 10:54 AM
Last Updated : 24 Oct 2014 10:54 AM

சரிதாவின் குரல்வளையை நெரிக்கும் குத்துச்சண்டை சங்கம்

தென் கொரியாவின் இன்சியான் நகரில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி, நடுவர் பாரபட்சமாக செயல்பட்டதாகக் கூறி வெண்கலப் பதக்கத்தை உதறினார்.

அதன் எதிரொலியாக இப்போது சரிதா தேவியை மட்டுமின்றி இந்திய குத்துச்சண்டை பயிற்சி யாளர்கள் குருபாக்ஸ் சிங் சாந்து, பி.ஐ.பெர்னாண்டஸ், சாகர் மல் தயால், ஆசிய விளையாட்டுப் போட் டிக்கான இந்திய விளையாட்டுக் குழுவின் தலைவராக இருந்த சுமேரிவாலா ஆகியோருக்கு தடை விதித்துள்ளது சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ).

அடுத்த மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்க சரிதா தேவியை அனுமதிக்கமாட்டோம் என தெளிவாகக் கூறியிருக்கும் ஏஐபிஏ, இது தொடர்பாக அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கும் என அறிவித்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி முடிந்தவுடனேயே சரிதா தேவி தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு கடிதம் எழுதிவிட்ட நிலையில், இப்போது அவர் மீது அதிரடி நடவடிக்கை பாய்ந் திருப்பது இந்திய விளையாட்டு வீரர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கதறியழுத சரிதா

சரிதா தேவி அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்? அரையிறுதிப் போட்டியின்போது தன்னை எதிர்த்து விளையாடிய தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிற்கு சாதகமாக நடுவர் செயல்பட்டார் என சரிதா தேவி கதறியழுதபோது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் இந்திய அதிகாரிகள்கூட அவருக்கு துணை நிற்கவில்லை.

நிர்க்கதியாக விடப்பட்ட சூழ்நிலையில் தனது எதிர்ப்பை தெரிவிக்க அவருக்கு இருந்த ஒரே ஆயுதம் பதக்கத்தை உதறுவதுதான். அதைத்தான் அவர் செய்தார். பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்த அவர், தன்னை அரையிறுதியில் எதிர்த்து விளையாடிய ஜினா பார்க்கின் கழுத்தில் அணிவித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார். ஏதோ பதக்கம் கிடைத்தால் போதும் என்று நினைக்கக்கூடிய வீரர்களுக்கு மத்தியில் பதக்கம் தேவையில்லை என்று ஒருவர் உதறுகிறார் என்றால் அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பார்?

தான் பெற்ற இரண்டு குழந்தை களையும் மாதக் கணக்காக பார்க் காமல் கடுமையான பயிற்சி பெற்று போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடிய நிலையில் தோற்ற தாக நடுவர் அறிவித்தபோது அவருடைய மனநிலை எப்படி யிருந்திருக்கும்? அதுவும் காலவரை யரையற்ற தடையை விதித் திருக்கிறார்கள். ஊக்கமருந்து உட்கொள்பவர்களுக்கும், பெரும் தவறிழைப்பவர்களுக்கும்கூட ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்றுதான் தடைவிதிக்கிறார்கள். ஆனால் நியாயம் கேட்டுப் போராடிய சரிதாவுக்கு காலவரை யறையற்ற தடை விதித்திருப்பதன் மூலம் ஏஐபிஏ எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணரமுடிகிறது.

வீடியோ ஆதாரம்

பதக்கத்தை உதறியதற்காக சரிதாவை நிர்பந்தித்து மன்னிப்பு கடிதம் பெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், சரிதாவின் குற்றச்சாட்டு தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சரிதா நடுவர் மீது குற்றம்சாட்டியபோதே, அந்தப் போட்டி தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆராய்வதற்கு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்வராதது ஏன்?

இப்போது அனைத்துவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இருக்கிறது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சரிதாவின் அரையிறுதிப் போட்டி தொடர்பான வீடியோவை ஆராய்ந்திருந்தால் அவருடைய குற்றச்சாட்டு உண்மையா, இல்லையா என்பதைக் கண்டறிந்திருக்கலாம்.

அதோடு அந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அதை செய்யாதது ஏன்? இதிலிருந்தே ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நடுவரை பாதுகாக்க முயற்சித்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

நிர்வாகிகளுக்கு சாதகமான விதிமுறை

விளையாட்டுத் துறையில் உள்ள விதிமுறைகள் சங்க நிர்வாகிகளுக்கு சாதகமாகவும், வீரர்களுக்கு பாதகமாகவுமே உருவாக் கப்பட்டிருக்கிறது. அதனால் நடுவர்கள் மிக துணிச்சலாக தவறிழைக்கிறார்கள். இன்றைக்கு அந்த விதிமுறைகளைப் பயன்படுத்தி நடுவரைப் பாதுகாத்துக்கொண்டதோடு, அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த சரிதா தேவியின் குரல் வளையை நெரித்திருக்கிறது சர்வதேச குத்துச்சண்டை சங்கம்.

இந்தியாவுக்கு எதிராக ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் நடுவர்கள் பாதகமாக செயல்படுவது காலம்காலமாக தொடர்ந்து வருகிறது. ஆனால் சரிதா தேவியைப் போன்று யாரும் துணிச்சலாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதுதான் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு சாதகமாகிப் போனது.

பயனற்ற குத்துச்சண்டை சம்மேளனம்

சரிதா பதக்கத்தை உதறினார் என்று அவருக்கு தடை விதித் திருக்கிறார்கள். ஆனால் தவறுக்கு காரணமான நடுவர் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை? எதுவும் செய்யாத இந்திய பயிற்சியாளர்களுக்கும், இந்திய விளையாட்டு குழுவின் தலைவருக்கும் ஏஐபிஏ ஏன் தடை விதித்தது?

அநீதியை எதிர்த்து முதல்முறையாக குரல் கொடுத்த சரிதா தேவியோ இன்று ஏஐபிஏவின் தடையை எதிர்நோக்கியிருக்கிறார். அவருக்கு ஆதரவாக பேசுவதற்கு இன்று யாருமே இல்லை. சரிதா தேவி விவகாரத்தில் ஏஐபிஏவிடம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டிய இந்திய குத்துச்சண்டை சம்மேளனமோ ஏஐபிஏவின் நிரந்தர அங்கீகாரம் இல்லாததால் வாயை மூடிக்கொண்டு இருக்கிறது.

நிர்வாகிகள் தேர்தலில் முறை கேட்டில் ஈடுபட்டதால் இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்த ஏஐபிஏ சில நாட்களுக்கு முன்னர்தான் தற்காலிக அங்கீகாரத்தை வழங்கியி ருக்கிறது. இந்திய குத்துச்சண்டை சம்மேளனமே பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. அப்படியி ருக்கையில் அவர்கள் சரிதாவுக்கு ஆதரவாக எப்படி பேசுவார்கள்?

கடைசி நம்பிக்கை

சரிதா தேவி விஷயத்தைப் பொறுத்தவரையில் இப்போது அவருக்கு துணை நிற்க வேண்டியது இந்திய ஒலிம்பிக் சங்கமும், மத்திய விளையாட்டு அமைச்சகமும்தான். சரிதா தேவி நாட்டில் உள்ள ஏதோ ஒரு கிளப்புக்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்தியாவுக்காகத்தான் பங்கேற் றார். அவர் விஷயத்தில் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலும், ஏஐபிஏவும் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கமும், மத்திய விளையாட்டு அமைச்சகமும் கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

இந்தத் தடையை உடனடியாக நீக்கி, உலக சாம்பியன்ஷிப் போட்டி யில் சரிதா தேவி பங்கேற்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை களை மத்திய விளையாட்டு அமைச் சகமும், ஒலிம்பிக் சங்கமும் மேற் கொள்ள வேண்டிய தருணம் இது. தேவைப்பட்டால் விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச தீர்ப் பாயத்திலும் வழக்கு தொடரலாம்.

சரிதா தேவி விளையாடிய அரையிறுதிப் போட்டி தொடர்பான வீடியோவை தீர்ப்பாயத்தின் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். அதில் நடுவர் தவறிழைத்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த நடுவருக்கு தடை விதிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் சரிதா தேவிக்கு தடை விதித்துள்ள ஏஐபிஏ ஆகியவற்றுக்கு பெரிய அளவில் அபராதம் விதிக்க வேண்டும். சரிதா தேவிக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பு.

தவறு செய்த நடுவரை பாதுகாக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலும் சர்வதேச குத்துச்சண்டை சங்கமும் முயற்சிக்கிறபோது, அநீதியை எதிர்த்து போராடிய சரிதா தேவிக்கு நியாயம் கிடைக்க மத்திய விளையாட்டு அமைச்சகமும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் எந்த நடவடிக்கையில் இறங்கினாலும் அது தவறில்லை. ஒருவேளை சரிதாவுக்கு நியாயம் கிடைக்காமல் போனால் அது இந்திய விளை யாட்டுக்கே மோசமான முன்னுதார ணமாக அமைந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x