

பொது பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ. 1,943 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இது கடந்த ஆண்டை விட ரூ.351 கோடி அதிகமாகும்.
கடந்த ஆண்டு விளையாட்டு துறைக்கு ரூ.1592 கோடி ஒதுக்கப் பட்டிருந்த நிலையில் 2017-2018-ம் ஆண்டுக்கான நிதியானது ரூ.1,943 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டு போட்டி களுக்கு வீரர், வீராங்கனைகள் சிறப்பான முறையில் தயாராகும் விதமாக இந்த ஆண்டின் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் மட்டுமே கிடைத்ததால், விளை யாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், வீரர் களின் திறனை மேம்படுத்தும் வகையிலுமே இந்த நிதி ஒதுக்கீடு உயர்வு அமைந்துள்ளது.
போட்டிகளுக்கு வீரர், வீராங் கனைகளை தயார்படுத்தும் விதமாக பயிற்சி முகாம் நடத்த இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு ரூ.481 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த நிதியானது ரூ.416 கோடியாக இருந்தது.
அதேவேளையில் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளுக் கான நிதி கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.4 கோடி வழங்கப்பட்ட நிலையில் இம்முறை வேறும் ரூ.1 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு கூட்ட மைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியானது ரூ.185 கோடியில் இருந்து ரூ.302 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் விளையாட்டு துறை நலன் திட்டத்துக்கான நிதி ரூ.131.33 கோடியில் இருந்து ரூ.148.4 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப் படும் விளையாட்டு துறைக்கான நிதியில் எந்தவித மாற்றமும் செய்யப் பட்டவில்லை. இந்த பகுதிக்கு ரூ.75 கோடி வழங்கப்படுகிறது. என்எஸ்எஸ் அமைப்புக்கான நிதி ரூ.137.50 கோடியில் இருந்து ரூ.144 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியானது ரூ.5 கோடியில் இருந்து ரூ.2 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊட்டசத்து உணவுகள் வழங்குவதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்துக்கு வழங்கப்படும் நிதி ரூ.140 கோடியில் இருந்து ரூ.350 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.