சர்ச்சையை ஒதுக்கி வைத்து விட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்: கங்குலி அறிவுரை

சர்ச்சையை ஒதுக்கி வைத்து விட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்: கங்குலி அறிவுரை
Updated on
1 min read

கும்ப்ளே, கோலி வேறுபாடுகள் குறித்து இருவரையும் சந்திப்பதாக இருந்த செய்தியை மறுத்த கங்குலி, இப்போதைக்கு பேசாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உள்ள கங்குலி இன்று கேப்டன் கோலி, பயிற்சியாளர் கும்ப்ளே மற்றும் வீரர்கள் சிலரை சந்திக்கவிருந்ததாக எழுந்த செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

“இன்று காலை நான் 8 மணி முதல் மைதானத்தில்தன இருந்தேன். நான் வீரர்களுடன் பேசுவதாகவும், விராட் கோலியுடன் பேசுவதாகவும் கூறப்பட்டது, ஆனால் ஒன்றைக்கூட நான் செய்யவில்லை.

இப்போதைக்கு கூறுவதற்கு எதுவும் இல்லை. என்ன நடக்கிறது என்பதை பொறுமையுடன் அணுகுவோம். சரியான நபர்களிடமிருந்து இது குறித்து கேட்டறிய வேண்டும். இது என்ன பிரச்சினை, இவர்களுக்கு என்ன வேண்டும்? முன்னோக்கி நகர என்ன செய்ய வேண்டும் என்பதை சரியான நபர்களிடமிருந்தே கேட்டறிய வேண்டும். சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வருகிறோம். நான் இவை பற்றியெல்லாம் யோசிக்கக் கூட இல்லை.

இந்தச் சூழ்நிலையைக் கையாள வேண்டும். கேப்டன், பயிற்சியாளர் ஆகியோரே இதனைக் கையாள வேண்டும். பேசாமல் அமைதியாக இருந்து ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள் என்றே கூற முடியும்.

கும்ப்ளேவின் எதிர்காலம் ஊசலாடுகிறதா என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாம் அனைவரும் என்ன வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால் அங்கு இரண்டு அருமையான வீரர்கள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அதாவது விராட் கோலி மற்றும் அனில் கும்ப்ளே. அவர்கள் பொறுப்பு மிக்க கிரிக்கெட் வீரர்கள்; அவர்களுக்கு தான் என்ன செய்கிறோம் என்பது தெரியும்.

ஈகோ மோதலா?

வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இது இருக்கிறதே. சில வேளைகளில் சிறிய விஷயங்கள் பெரிதாக ஊதிப்பெருக்கப்படும். இரண்டு பேர் அமர்ந்து பேசினாலே இருவேறு கருத்துகள் எழுவது இயல்புதான். அதற்காக சேர்ந்து பயணிக்க முடியாது என்பதல்ல.

இந்திய அணி அருமையான அணி கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானை விட சிறப்பாக ஆடி வருகிறது. ஆனால் நாளை ஒரு புதிய ஆட்டம், புதிய நாள் இதில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

வாழ்க்கையில் அனைவருமே சர்ச்சையை எதிர்கொள்கிறோம், ஆனால் ஒரு தொழில்பூர்வ கிரிக்கெட் வீரர்களாக இதனைக் கடந்து செல்ல வேண்டும். இதைப்பற்றி கவலைப்படக் கூடாது. கிறிஸ்டியானோ ரொனால்டோவை எடுத்துக் கொள்ளுங்கள் சர்ச்சையில் சிக்காத நாட்களே இல்லை. ஆனால் களத்தில் இறங்கி ரியால் மேட்ரிட் அணியை சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிக்கு இட்டுச் செல்கிறார்.

இவ்வாறு கூறினார் கங்குலி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in